From Fri Apr 16 21:06:24 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 1410 invoked by uid 7770); 17 Apr 1999 04:06:22 -0000
Received: from dfw-ix12.ix.netcom.com (206.214.98.12) by vault.egroups.com with SMTP; 17 Apr 1999 04:06:22 -0000
Received: (from smap@localhost) by dfw-ix12.ix.netcom.com (8.8.4/8.8.4) id XAA21023; Fri, 16 Apr 1999 23:06:15 -0500 (CDT)
Received: from pc-242-22.corp.3com.com(139.87.242.22) by dfw-ix12.ix.netcom.com via smap (V1.3) id rma021002; Fri Apr 16 23:05:49 1999
Message-ID: <00ad01be8887$56a0e4e0$16f2578b@...>
From: "Mani M. Manivannan"
To: , "Tamil iNaiyam"
Cc: "Dr.K.Loganathan"
Date: Fri, 16 Apr 1999 21:04:05 -0700
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.5
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: Sumeeruth thamil 21
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 284

பேராசிரியர் லோகநாதன் அவர்களே,

>தமிழ் மக்களிடையே சுமேருத்தமிழ் மீது இன்னும் ஆர்வம் பிறக்கவில்லை
>என்று நன்றாகத் தெரிகின்றது.

பொதுவாகவே இது போன்ற தலைப்புகளில் ஈடுபாடு உடையவர்களின்
எண்ணிக்கை மிகக்குறைவு. உங்கள் கட்டுரைகள், ஆராய்ச்சிக் கட்டுரை
நடையில் இருப்பதால் மேலெழுந்தவாரியாகப் படிப்பவர்களுக்குப்
புரிந்து கொள்வது சற்றுக் கடினம். அது மட்டுமல்லாமல், இந்தக்
கட்டுரைகளை ஆராய்ந்து அவற்றிலிருக்கும் கூற்றுக்கள் ஏற்கக்கூடியவையா
என்று முடிவு செய்யத் தேவையான புலமை பெரும்பாலோர்க்கு இல்லை.
மொழியியல், வரலாறு, ஒப்பீட்டுச் சொல்லாராய்ச்சி, போன்ற துறைகளில்
ஆழ்ந்த புலமை இல்லாமல் உங்கள் கட்டுரைகளைப் படித்துக் கருத்துரைப்பது
எளிதல்ல.

அது மட்டுமல்லாமல் உங்கள் புரட்சிகரமான கருத்துக்களின் அடிப்படைகள்,
ஆதாரங்கள் ஏதேனும் அறிஞர்களின் தாளிகையில் ஆராயப்பட்டு வெளியிடப்
பட்டால், சுமேருத்தமிழ் மீது ஆர்வம் பிறக்கலாம். அதுவரை, சுமேரு
மொழிக்கும், தமிழுக்கும் தொடர்பு உள்ளது என்ற கூற்று பண்டைத்தமிழர்
பெருமை பேசும் தமிழார்வலர்களின் நம்ப முடியாத கற்பனை என்று
ஒதுக்கிவிடும் வாய்ப்புள்ளது.

நான் உங்கள் கட்டுரைகளைச் சேர்த்து வைத்துள்ளேன். படித்தும் வருகிறேன்.
எனக்குத் தெரிந்த அரைகுறை மொழியியல் கோட்படுகளின் அடிப்படையில்
உங்களின் பல கூற்றுகளை என்னால் ஏற்க முடியவில்லை. அதனால்
அவை தவறு என்று சொல்லவில்லை. இதன் கோட்பாடுகளை ஆராயும்
அளவுக்கு மொழியியற்புலமை உள்ளவர்களின் கருத்துக்களைத் தெரிந்து
கொள்ள ஆவலாய் உள்ளேன்.

உங்கள் கட்டுரைகளில் பல வடமொழிச் சொற்களைச் சுமேருத்தமிழிலிருந்து
வந்தவை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் அதற்கான ஆதாரங்கள்
போதுமான அளவுக்குக் குறிப்பிடவில்லை.

அதே போல் பல சொற்களுக்கு நீங்கள் குறிப்பிடும் வரைவிலக்கணம்
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இருந்திருக்குமா என்பது ஐயமே.
உங்கள் கட்டுரைகளில் அடிக்கடி "இருக்கலாம் என்று தோன்றுகின்றது"
என்று எழுதுகிறீர்கள். மொழியியல் கோட்பாடுகள் ஓரளவுக்கு
வளர்ந்திருக்கும் இப்போது, நீங்கள் அந்தக் கோட்பாடுகளின் முறைகளின்
அடிப்படையில் சொற்களை ஒப்பிட்டால் இன்னும் ஏற்புடையதாக
இருக்கும். இல்லையேல், நீங்கள் சொற்களின் பொருட்களை இன்றைய
வழக்கின்படி ஆராய்கிறீர்களோ என்ற தயக்கம் ஏற்படுகிறது.

இல்லாத 'லெமூரியா'க் கண்டத்தில் கடற்கோள் கொண்ட கபாடபுரத்தைத்
தனித்தமிழ் அறிஞர்கள் வைத்ததனால் உண்மையான கபாடபுரம்
எங்கே இருக்கிறது என்று யாரும் ஆராய்வதில்லை. அதுபோல்,
சுமேருவுக்கும் தமிழுக்கும் அடிப்படை ஒற்றுமைகள் இருக்கின்றன
என்பதைப் பல அறிஞர்களும் ஏற்றுக் கொள்ளும்வரையில், உங்கள்
கட்டுரைகள், இப்படியும் இருக்குமோ என்று சிந்தனையைத் தூண்டும்
முறையில் மட்டுமே அமைந்திருக்க வேண்டியிருக்கிறது.

ஒருமுறை நீங்கள் "சுமேருத்தமிழ்" மலையகத்தில் வாழ்ந்து உலகெல்லாம்
பரவியிருக்கும் மக்களின் மொழியெனக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கான
ஆதாரத்தை எங்கேயுமே கண்டு பிடிக்க முடியவில்லை.

சுமேரியர்கள் வந்தேறிகளாக இருக்கலாம் என்ற ஒரு சிறு கருத்து மட்டுமே
வரலாற்றாசிரியர்களிடையே நிலவுகிறது. இந்த நூலை மட்டும் வைத்துச்
சேலை நெய்ய முடியுமா?

மலையகத்துக் குடிகள் தீவு விட்டுத் தீவு தாவி ஈஸ்டர் தீவு, ஹவாய் தீவுகள்
வரை குடி பெயர்ந்தவர்கள் என்ற கருத்து சில வரலாற்றாசிரியர்களிடம்
நிலவிய போதிலும், அவர்கள் மேற்கு நோக்கி வந்து தமிழகத்துக்கோ அல்லது
சுமேரியா வரையிலுமோ ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருக்க
முடியுமா என்பது ஐயமே. அரபிக் கடலைக் கடந்து தமிழகத்திலிருந்து
அரபுத் துறைமுகங்களுக்கு அடிக்கடிக் கப்பலில் செல்வதற்குப் பருவக்காற்றுகள்
பற்றித் தெரிந்திருக்க வேண்டும். ஈஸ்டர் தீவுக்குச் செல்ல முடிந்த குடிகட்கு
அரபுத் துறைமுகங்கள் ஒரு பொருட்டல்ல. இருப்பினும், சுமேரிய நாகரிகத்தை
அமைத்த குடிகள் மலையகத்திலிருந்து வந்த தமிழ்க்குடிகள் என்ற கூற்றுக்கு
ஏதெனும் ஆதாரம் உண்டா?

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
பிரிமான்ட், கலி., அ.கூ.நா.


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com