From Narayanan Kannan Wed May 5 15:23:24 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 9715 invoked by uid 7770); 5 May 1999 22:23:13 -0000
Received: from web104.yahoomail.com (205.180.60.69) by vault.egroups.com with SMTP; 5 May 1999 22:23:13 -0000
Message-ID: <19990505222524.21109.rocketmail@...>
Received: from [134.245.18.198] by web104.yahoomail.com; Wed, 05 May 1999 15:25:24 PDT
Date: Wed, 5 May 1999 15:25:24 -0700 (PDT)
From: Narayanan Kannan
To: agathiyar@egroups.com
MIME-Version: 1.0
Subject: [agathiyar] pAsura madal 56 - பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
Content-Type: text/plain; charset=us-ascii
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 429

பாசுர மடல் 56 பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?

கங்கையிற் புனிதமான காவிரி மெல்ல யசோதை கண்ணனை
அணைத்துத் தூங்குவது போல் அடலொளி திகழ் தரு திகிரியந்
தடக்கை அரங்கத்தம்மான் பாம்பணையில் பள்ளி கொள்ளும்
திருவரங்கத்தை அணைத்துச் சென்றாள். அது காலைப் பொழுது:

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்
கனவிருளகன்றது கலையம் பொழுதாய்
மதுவிரிந் தொழுகின மாமலரெல்லாம்
வானவ அரசர்கள் வந்து வந்தீண்டி
எதிர் திசை நிறைந்தன இவரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்றுளது எங்கும்
அரங்கத் தெம்மா! பள்ளி எழுந்தருளாயே!! (திருமாலை 2, 1)

அந்தரத்து அமரர்கள் கூட்டம் ஒரு புறம், அருந்தவ முனிகளின் கூட்டம்
ஒரு புறம், இந்திரன் முதலாய வானவர் ஒருபுறம், சுந்தரர், நெருங்
கவிச்சாதரர் இப்படி பலரும் எம்பெருமான் கோயில் வாசலில் திருப்பள்ளி
எழுச்சி சொல்லிக் கொண்டிருக்க, கலியின் துயர் தீர்க்க தூப்புல் என்னும்
ஊரில் அவதரித்து வேதாந்த தேசிகனாக மலர்ந்த வேங்கடநாத குரு
தனது சிஷ்ய கோஷ்டிகளுடன் பிரபந்தம் சொல்லிக் கொண்டு கோயிலுள்
நுழைகிறார்.

வானவியல், ரசவாதம், உயிரியல், மருத்துவம், கட்டிடக்கலை, இசை, லலித
கலை, சட்டம், இலக்கியம், தருக்கம், மீமாம்சம், வியாக்கரணம், வேதாந்தம்,
என்று எந்தத்துறையிலும் கொடிகட்டிப் பறந்த அவருக்கு சிஷ்ய கோஷ்டி
பெரும் அளவில் கூடியது ஆச்சர்யமில்லைதான். தமிழ்வானில் தாரகையாய்
120 வருடங்கள் பிரகாசித்து மறைந்த இராமானுசருக்குப் பின் 131
ஆண்டுகள் கழித்து வரும் வேதாந்த தேசிகர், இராமானுசரின் பிரதம
சீடர்களில் ஒருவரான கடாம்பி ஆசான் குடும்பத்தவர். இத்தனை பெருமைகள்
இருந்தும் அவரைக் கேட்டால், "சிலருக்கு பற்றிக் கொள்ள கர்மம் இருக்கிறது,
சிலரோ ஞானத்தை விடாப் பிடியாய் பிடித்துள்ளனர். நமக்கு பற்றிக் கொள்ள
இருப்பது அரங்கன் அடியார்களின் திருப்பாதம்தான்" என்பார்.

சரியாகச் சொல்வதானால், 1327ம் ஆண்டு! தானுண்டு, தன் திருப்பணி
உண்டு என்றிருந்த வேங்கடநாதனை சோதிக்க அரங்கன் திருவுள்ளம்
கொண்டான். சீடர்கள் அன்று காலை சொன்ன சேதி அவ்வளவு இனிப்பாக
இல்லை. அலாவுதீன் கில்ஜியின் கொடூர சேனாதிபதியான மாலிக்காபூர்
திருச்சிவரை வெற்றிவாகை சூடி வந்துவிட்டான். வரும் வழியெல்லாம்
கொள்ளை, கொலை, கொடூரம். அடுத்த இலக்கு, வைரமும், தங்கமும்
சொரிந்து நிற்கும் திருவரங்கம்தான் என்று எல்லோரும் புலம்பினர்.

"வெறுப்பொடு சமணர் முண்டர்
விதியில் சாக்கியர்கள், நின்பால்
பொறுப்பரியனகள் பேசில்
போவதே நோயதாகி
குறிப்பெனக் கடையுமாகில்
கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமங்கண்டாய்
அரங்கமா நகருளானே!

என்று வீரம் பேசும் அரங்கத்தவர் எங்கே?"

"மன்னிக்க வேண்டும் சுவாமி! வழி, வழியாக சாதியில் பிரிவு பட்டு,
வர்ணங்களாய் திரிந்து நிற்கும் தமிழக வீரர்கள், அடிமைகளும்
சேனாதிபதிகள் ஆகும் துருக்கிய வீரர்களின் தீரத்த்ன் முன் நிற்க
முடியவில்லை, சுவாமி!"

"வைணவத்தில் ஏதடா வர்ணம்? சாதி? இராமானுசன் இயற்றிய சட்டம்
அழிந்து போனதோ இந்த மண்ணில்?

அடிமையில் குடிமை இல்லா
அயல் சதுப் பேதிமாரில்
குடிமையில் கடைமை பட்ட
குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய்!
மொய்கழற்கன்பு செய்யும்
அடியவரை யுகத்தி போலும்,
அரங்கமா நகருளானே!"

"மீண்டும் மன்னிக்க வேண்டும், சுவாமி! இராமானுசர் போய் 190 வருடங்கள்
ஆகிவிட்டன. தேவரீர் அருள் செய்து அச்சட்டத்தை மீண்டும் இந்த மண்ணில்
நிலைநாட்ட வேண்டும். அதற்கு முன், தாமதிக்காமல் அரங்கனையும்,
அவன் அடியவர்கள் செய்வித்தருளிய பிரபந்தங்களையும், வைணவ
இலக்கியங்களையும் பாதுகாத்து வருகின்ற சந்ததியினருக்கு
மீட்டுத் தர வேண்டும். தங்களின் மாந்தீரிக சக்தியால் திருவரங்கத்திற்கு
தீது ஏதும் வாராமல் காத்து அருள வேண்டும்."

வேக, வேகமாக காரியங்கள் நடந்தன. வயது முதிர்ந்த நிலையிலும்
பிள்ளை லோகாச்சாரியாரும், அவரது சீடர்களும் நம்பெருமாளை
பல்லக்கில் போட்டுக் கொண்டு தெற்கு நோக்கி நகர்ந்து விட்டனர்.
பெரிய பெருமாளின் சந்நிதியை செங்கல் வைத்து மறைத்து விட்டனர்.
கொல்ல வந்த புலியை முறத்தால் விரட்டிய பெண்டிர்கள் கொண்ட
தமிழகம் தன் வீரத்தை இன்னும் மறந்து விட வில்லை என்று தன்
உயிரைத் திரணமாக மதித்து ஒரு கோஷ்டி வடக்கு நோக்கி நகர்ந்தது.
வைணவ இலக்கியங்களை சுமந்து கொண்டு வேங்கடநாதர் வடமேற்கு
திசை நகர தலைப்பட்டார்!

அப்போது, சுதர்சன பட்டர் தேசிகரின் கையைப் பிடித்துக் கொண்டு, தாம்
முன்பு இயற்றிய சுருதப் பிரகாசிகை என்னும் நூலைத் தந்து, "அரும்
புலவச் செல்வரே! இந்நூலை நீர் நன்கு ஆய்ந்து, பரவச் செய்தல் வேண்டும்"
மேலும், "இச்சிறுவர்களையும் நீரே காத்தருள வேண்டும்!" என்று தன்
புதல்வர்களையும் அவரிடம் ஒப்புவித்தார். சத்தியமங்கலம் செல்லும்
வழியில் தேசிகர் கண்டதெல்லாம் பிணக் குவியல்தான். இரத்த
வெள்ளம் ஆறாய் ஓட நரியும், பிணந்தின்னிக் கழுகளும் ஆட்டம் போட்டுக்
கொண்டு நின்றன.

அவர் இம்மாதிரி ஒரு காட்சியை தன் வாழ் நாளில் கண்டதில்லை. இது
என்ன சோதனை?

உடம்பினால் குறைவில்லா
உயிர் பிரிந்த மலைத் துண்டம்
கிடந்தன போல் துணி பலவா
அசுரர் குழாம் துணிந்துகந்த
தடம் புனல் சடைமுடியன்
தனியொரு கூறமர்ந்துறையும்
உடம்புடையான் கவராத
உயிரினால் குறைவிலமே!

என்ற திருவாய்மொழியை நினைவு படுத்தவா இக்காட்சிகள்? எம்பெருமானே!
நான் பயம் என்ற ஒன்றை இதுமுன் அறிந்ததில்லை, இதுவென்ன கடுஞ்
சோதனை? என்று அலற்றியவாறு தேசிகர் கடிது நடந்து, சோர்வுற்று
பிரம்ம தந்திர சுதந்திர சீயர் முதலிய முதலிகள் தொடர சத்தியமங்கலம்
வந்து சேர்ந்தார்.

பயம் என்பது பல்வகையானது. தொன்று தொட்டு உயிரின் ஊடாக ஒன்றிவிட்ட
உயிரிப் பயம் முதல். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் பயம் இது.
கொலைவெறி கொண்ட கள்வனின் முன் வரும் பயம்! குதித்துப் பாயும்
கொடும் மிருகம் முன் வரும் பயம். புயலும், மின்னலும் இன்ன பிற
இயற்கை தோற்றுவிக்கும் பயம் ஒருவகை. பின், உறவுகள் சார்ந்த பயம்
பலவகை. மனைவியைக் கண்டு பயத்தல், பிள்ளைக்குப் பயத்தல்,
கோல் தாங்கும் ஆசிரியருக்குப் பயத்தல், அறம் பாடும் புலவர்க்குப்
பயத்தல், மந்திரம் ஏவும் மாந்தீரிகனுக்குப் பயப்படுதல், துஷ்ட
தெய்வங்களுக்கு பயத்தல், கோளுக்குப் பயத்தல், எதிர் காலத்திற்குப்
பயத்தல். மரண பயம், சொர்க்கம்-நரகம் பற்றிய பயம். இப்படி பயம் என்பது
எண்ணெயில் ஊறிய திரியாய் நம்முள் தோய்ந்து நிற்கிறது.

தேசிகர் சத்திய மங்கலத்தில் வாழ்ந்த நாற்பது ஆண்டுகளில் பயம்,
அச்சம் பற்றி நிரம்ப சிந்தித்தார். அவரது தியானம் மெல்ல, மெல்ல
"அபிஹிதி ஸ்தவா" என்ற நூல் ஆகியது.

அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பா!
துணியேன் இனி நின் அருளல்ல தெனக்கு
மணியே! மணி மாணிக்கமே! மதுசூதா!
பணியா எனக்குய்யும் வகை, பரஞ்சோதீ! (பெரிய திருமொழி 11.8.8)

என்று எம்பெருமான் முன் சரண் அடைந்து அவரது கல்யாண குணங்களை
போற்றேற்றி, அவரது நாமம் சொல்பவரை எந்த பயமும் பிணிக்காது
என்று சொல்லி பத்துப் பாடல்கள் செய்வித்தார். அடுத்த எட்டுப் பாடல்களில்
பலவகை அச்சங்களைச் சொல்லி அவை "கிட்ட நில்லாதே பகையே,
துள்ளி வருகுது வேல்" என்று சொல்வது போல், பயத்தை எட்ட வைத்து
விரட்டுமாறு பாடுகிறார்.

பாடல் 19-27 வரை,

"துணிவு இனி எனக்குச் சொல்லுவன் மனமே!
தொழுது எழும் தொண்டர்கள் தமக்கு
பிணி ஒழித்து, அமரர்ப் பெரு விசும்பு அருளும்
பேரருளாளன்! எம்பெருமான்" (பெ.தி.மொ. 1.4.4)

என்னும் வண்ணம் திருவரங்கம் கோயிலையும், அதில் வாழும் தொண்டர்
களையும் காத்து அருளுமாறு வேண்டி இறைஞ்சுகிறார் தேசிகர். பாடல் 22-ல்
துருக்கியரும், யவனரும் திருவரங்கத்திற்கு செய்வித்த தீங்கு பற்றி
சொல்லிச் செல்கிறார்.

சரணாகதி செய்யும் வகையை நான்காகப் பிரிக்கிறார் தேசிகர். 1. பூமி தேவி
வராக மூர்த்தியிடம் செய்வித்த சராணாகதி. இது பாதாள உலகில் இருந்து
பூமியை காத்தருளிய தன்மையை விளக்குவது, 2. இராம சரணம் -
சுக்ரீவன் முதலானோர் சொன்ன பின்பும் தன்னிடம் சரண் என்று
வந்தவனைக் காக்கும் இராமனின் பண்பை விளக்குவது, 3. காண்டீபம்
ஏந்தி சமர் புரிய நிற்கும் அர்ச்சுனன் உறவுகளைக் கண்டு மயங்கி,
போர் புரிய மறுக்கும் நிலையில் கண்ணனிடம் சரண் அடைந்து கீதை
உபதேசம் பெருவதை விளக்குவது, மற்றும், 4. கணையாழி பெற வேண்டி
வந்து நிற்கும் அநுமன், ராட்சசி கூட்டத்தை கூண்டோடு அழிக்க
முற்படும் போது சீதை நாச்சியார், "பகைவனுக்கு அருள்வாய்! நன் நெஞ்சே!"
என்று பகைவருக்கும் அபயம் அளிக்கும் வகையைச் சொல்வது.

"அணிமணிப் பைம்பூண் அமரர்க்கு முதல்வன் நீ
.......... .......... .......... .......... .......... ..........
அன்னவர் படவல்லா அவுணர்க்கு முதல்வன் நீ
அதனால், பகைவர் இவர், இவர் நட்டோர் என்னும்
வகையும் உண்டோ நின் மரபறி வோர்க்கே?" (பரிபாடல் 3. 53-58)

கடைசி 28 & 29 பாடல்களில், "எம்பெருமானே! ஸ்ரீ ராமானுசரின்
திவ்ய மொழி பயின்று சென்றன என் இளமையெல்லாம். முடி நரைத்து
நிற்கும் இவ்வயதில் திருவரங்கம் வந்து உன் சேவடி செவ்வி என்று
இருக்கும் நிலை அருளாயோ? திருவரங்கத்தில் எதிரி ஏது?
ஒருவருக்கொருவர் உயர்த்த உதவும் ஆன்மாக்கள் நிறைந்த
அரங்கத்தில் என்னைச் சேர்த்துவிடு!" என்று முடிக்கிறார்.

தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ்
திருவரங்கத்துள் ஓங்கும்
ஒளியுளார் தாமே அன்றே
தந்தையும் தாயுமாவார்,
எளியதோ ரருளு மன்றே
எந்திறத் தெம்பி ரானார்,
அளியன் நம் பையல் என்னார்
அம்மவோ கொடியவாறே!

நாற்பது வருட அஞ்ஞான வாசத்திற்குப் பின் செஞ்சியைச் சார்ந்த
கோபன்னராயர் திருவரங்கத்தை துருக்கியரிடமிருந்து மீட்க, தேசிகர்
அவர் வேண்டிய படியே திருவரங்கம் வந்து சேர்கிறார். அரங்கனை
மீட்ட பிள்ளை லோகாச்சாரியர், அவன் பணியில் உயிர் நீக்கிறார்.

திருவரங்கம் மீண்டும் பொலிவு பெறுகிறது. வைணவம் நம் கைக்கு
மீண்டும் வந்து சேர்கிறது.

பாசுர மடல் 56 நிறைவுறுகிறது.

ps. அடிக்குறிப்பில்லாத பாசுரங்கள் தொண்டரடிப்பொடி அருளிச் செய்த திருமாலையில் உள்ளன.

===
விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமையெல்லாம்
மண்ணுலகத்தில் மகிழ்ந்தடைகின்றனர் வண்துவரைக்
கண்ணன் அடைக்கலங் கொள்ளக் கடன்கள் கழற்றிய நம்
பண்ண மருந்தமிழ் வேதமறிந்த பகவர்களே!

பாசுர மடல்கள் மலர தட்டுக: http://www.angelfire.com/ak/nkannan/puram.html
------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/group/agathiyar
http://www.eGroups.com - Simplifying group communications