From kgesu@... Fri Nov 24 19:01:04 2000
Return-Path:
X-Sender: kgesu@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-6 3 1 2); 25 Nov 2000 03:01:04 -0000
Received: (qmail 22090 invoked from network); 25 Nov 2000 03:01:03 -0000
Received: from unknown (10.1.10.27) by l7.egroups.com with QMQP; 25 Nov 2000 03:01:03 -0000
Received: from unknown (HELO smtp3.jaring.my) (192.228.128.46) by mta2 with SMTP; 25 Nov 2000 03:01:03 -0000
Received: from pd.jaring.my (j110.sja4.jaring.my [161.142.118.124]) by smtp3.jaring.my (8.10.1/8.10.1) with ESMTP id eAP30wm04945; Sat, 25 Nov 2000 11:00:59 +0800 (MYT)
Message-ID: <3A1F2A5A.C4785E88@...>
Date: Sat, 25 Nov 2000 10:56:26 +0800
X-Mailer: Mozilla 4.75 [en] (Win95; U)
X-Accept-Language: en
MIME-Version: 1.0
To: Agathiyar , Tamilnet
Subject: Ampai - Part 2
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
From: "R.K."
X-Yahoo-Message-Num: 7003


அம்பையின் கதைகளில் பல தமிழ் நாட்டு மண்ணில் நிகழ்பவை அல்ல. இந்தியாவிற்கு
வெளியில் நடக்கும் கதைகளும் உள்ளன. ஆனால் இந்தப் புதிய நிலைக்களன்களை நிறுவ
அவர் எந்தப் பிரயாசையும் எடுத்துக் கொள்வதில்லை. ஒரு ரெண்டு பாரா படித்தால்
வாசகரே விளங்கிக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் நேராகத் தொடங்கி
விடுகிறார்.

"ஒட்டக சவாரியில்" கதை ஜூஹு கடற்கரையில். ஆனால் அம்பையின் கதையில் அது
முக்கியம் அல்ல. ஆனால் லிங்க் தெருவில் உள்ள ஒட்டகம் முக்கியம். அது எந்த
நாட்டிலிருந்தோ இறக்குமதி செய்யப்பட்டது. "விஸர்ஜன்" வைபவத்தன்று பட்டுத் துணிகள்
முதுகில் விரிக்கப்பட்டு, தங்க முலாம் பூசிய கவசங்கள் முகத்தை மறைக்க பிள்ளையார்
ஊர்வலத்தில் முன் செல்லும் ஒட்டகங்களில் ஒன்றாயிருந்தது. இப்போது அதெல்லாம்
ஓய்ந்தவுடன் ஏதோ லாரியோ காரோ மோதி காயம்பட்டு மரண மூச்சு விட்டுக்
கொண்டிருக்கிறது. ஆனால் தொடர்ந்து படித்தால் அது கூட முக்கியம் அல்ல. அந்தத்
தெருவில் அந்த ஒட்டகத்தைப் பார்த்துப் பரிதாபப் படுகிறாளே, அந்த தெருவில்
திரியும் அலிப் பெண், அவள் முக்கியமாகிறாள்.

"தமிழா நீ?"

"ஆமாயக்கா... யமுனான்னு பேரு. காசு குடேன் ராசாத்தி"

"எந்த ஊரு நீ?"

"ஏதோ ஒரு ஊருக்கா. இங்க வந்து லோல் பட்றேன். எட்டணா தாயேன்."

மழைத்துளிகள் சொட்டி ஒட்டகத்தின் மூக்கில் விழுந்து வாய்ப்புறம் வடிகிறது. கால்களை
உதைத்துக் கொண்டு உயிர் விடுகிறது.

"எங்கியோ இருந்து இங்க கூட்டிட்டு வந்துட்டுக் கொன்னு போட்டிட்டிங்களேடா கம்மனாட்டிப்
பயலுவளா.." என்று ஏசுகிறாள் யமுனா. இந்த "அய்யோ பாவம்" என்ற உருக்கம் யாரைப்
போய் சேர வேண்டும் என்ற இலக்கை அங்கே நிர்ணயிக்கிறார் அம்பை. ஆனால் இந்தக்
கதைக்கு ஒட்டு வாலாக அந்த வீதியின் ஓசையைக் கூறி "இந்த சேதியைச்
செல்லுமிடமெல்லாம் பறை சாற்றுங்கள் என்று முறையிடுவது போல்..." என்று முடிக்கின்ற
விதம் ஒரு மறை போல சொல்லப் பட வேண்டிய செய்தியை உரத்துச் சொல்லி
சிதைக்கவில்லையா?

"திக்கு", "மினுங்கு" மீண்டும் முதலிரண்டு கதைகளை நினைவூட்டும் இலக்கு இல்லாத
ஆனால் நடைபெறும் நிகழ்வுகளின் யதார்த்தத்தை மட்டுமே சொல்லுகின்ற இதமான
பின்னல்கள். இவற்றில் செய்திகள் இல்லை என்பதல்ல. அறிவை முதன்மைப் படுத்தும்
வாசகனுக்கு கதையை மீறிய அர்த்தங்களுக்கானத் தேடல்கள் மேற்கொள்ளும் முயற்சியும்
தாளாண்மையும் இருந்தால் இந்த புகை மண்டலத்துள் (abstractions) இறங்கித் தேடிப்
பிடிக்கலாம். ரசனையை முதன்மைப் படுத்திப் படிக்கும் வாசகனுக்கு அது சோர்வு தரும்.

"ஆரம்பக் காலக் கவிதைகள்" "பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்" என்னும்
இரு கதைகளும் அம்பையின் எழுத்து வீரியத்தை மீண்டும் துலக்கும் கதைகள். முதல்
கதையில் உள்ள சுருக்கமான செய்தி சமுதாயம் பெண் குழந்தைகளுக்குப் புகட்டுகின்ற கடவுள்
பற்றிய நீதிக் கருத்துக்களுக்கும் உண்மை நடைமுறை வாழ்வில் உள்ள அநீதிகளுக்கும் உள்ள
முரண்பாடுகள் அதிகம் என்பது. முன்னதின் romanticism-உம் பின்னதின் கொடூரமும்
மிகுந்த கலைநயத்தோடு இதில் வெளிப்பட்டிருக்கின்றன.

"கீழே விடப்பட்ட குழந்தை பாலுக்கு அழுகிறது என்று ஞானப்பாலூட்டி, அந்தக் குழந்தையை
அற்புதமான கவிதைகள் எழுத வைத்தபோது, சுதந்திரம் அடைந்த ஒரு நாட்டில்
கோயமுத்தூர் என்ற ஊரின் கொசுக்கடி பிடுங்கும் ஆஸ்பத்திரி ஒன்றில் பிறந்ததற்காக
இவளுக்கு ஞானப்பால் மறுக்கப் பட வேண்டுமா என்ன?" என்னும் ஒரு மேற்கோளில் இந்தக்
கதையின் மையக்கருத்து இடங் கொண்டிருக்கிறது. (இந்தப் பகுதியை முடிக்குமுன் ஒரு
குறிப்பு: இந்து சமயத்தை இப்படி மானாவாரியாகக் கிண்டலடிக்கும் அம்பை. மற்ற
சமயங்களைக் குறிக்கும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் மிகப் பரிவுடன் பேசுவதென்ன?
அம்பைக்கும் மத ஓரவஞ்னை உண்டா?)

"பிளாஸ்டிக் டப்பா..." கதையில் தலைமுறைகள் மாறுகின்ற போது, புதிய
விழுமியங்களுக்காக இளைய தலைமுறை பழையவற்றிலிருந்து தன்னைத் தோலுரித்துக்
கொள்ளுகிறபோது ஏற்படும் இக்கட்டான உணர்வுகளை அம்பை தொடுகின்றார். இந்திய
சனாதனத் தலைமுறையில் வந்த விதவை அம்மா, அமெரிக்காவில் கணவனை விவாகரத்துச்
செய்துவிட்டு அதற்காக அலட்டிக் கொள்ளாமல் வாழும் மகளின் பாதுகாப்பில்
இருக்கிறாள். பராசக்தி முதலிய தெய்வங்களை ஒரு சிறிய பிளாஸ்டிக் பெட்டியில்
வைத்துப் போகும் இடம் எல்லாம் வைத்துப் பூசை பண்ணுகிறாள் அம்மா. இந்தியாவில்
"கிருஷ்ணா ரா" என்று கூப்பிட்டு காகங்களுக்குச் சோறுபோடுவது போல
அமெரிக்காவிலும் சோறு போட்டு "கிருஷ்ணா ரா" என்று விளிக்கிறாள். காக்கைகள்
இல்லாவிட்டாலும் அணில்கள் வந்து தின்கின்றன.

"நினைத்துப் பார்த்தால் அம்மாவின் இந்தக் காகங்களையும் அணில்களையும் அழைக்கும்
சங்கேத மொழி வானத்தையும் பூமியையும் பிணைக்கும் மொழி என்றே தோன்றுகிறது.
ஏதோ ஒரு வகையில் நாம் உதிர்ந்து போய்விடாமல் இருக்க ஒரு வஜ்ரம் போல் இது
இருக்கிறது" என்று எழுதுகையில் பாரம்பரிய சுமைகளைக் களையும் அம்பையின்
தீவிரத்துக்கிடையிலும் பழைமை பற்றிய ஒரு ஏக்கம் இருப்பது காண்கிறது.
யாருக்குத்தான் இல்லை? ஆனால் பழைமை மறைவதைப் பார்த்து ஏக்கப்படுவது தவிர அது
மறைய வேண்டும் என அவரே முன்னின்று பேசுவது பல கதைகளில் வெளிச்சம்.

தொகுப்புக்குத் தலைப்பைத் தந்துள்ள "காட்டில் ஒரு மான்" கவிதா அழகு நிறைந்த
கதை. சோகத்தை முழுதிலும் அடிநாதமாக வைத்து வாசகரின் உணர்ச்சிகளை
ஊறவைக்கிறார்.

தங்கம் அத்தை புஷ்பிக்கவில்லை. இயற்கை அவளை அப்படி தண்டித்திருக்கிறது. ஆனால்
அவள் அந்தத் தண்டனையோடு தன்னைச் சமரசம் செய்துகொண்டு கலகலப்பாகவே
இருக்கிறாள். "முடிச்சிட்ட சிவப்பு ரவிக்கையும் பச்சைப் புடவையும் முடிந்த தலையுமாய்
அவள் நிற்கும்போது அவள் தோற்றம் வித்தியாசமாகத் தெரியவில்லை. வள்ளியின்
அம்மா வள்ளியிடம் "அது வெறும் பொக்கை உடம்பு" என்றிருந்தாள். பொக்கை எங்கே
என்று தெரியவில்லை."

இந்தக் கதையில் தங்கம் அத்தையின் வருணனையில் ஓர் இடத்தில் அம்பையின் எழுத்து
அவருடைய வழக்கமான அடக்கத்தை விட்டுக் கொடுத்து லா.ச.ரா.வைப் போல் மன
உணர்தலின் மிகை அர்த்தங்களைக் கவிதையாக எழுகிறது. "மிதமான சூட்டுடம்பு
அவளுடையது. ரசங்கள் ஊறும் உடம்புடையவளாகப் பட்டாள். சாறு கனியும் பழத்தைப்போல்
ஒரு ஜீவ ஊற்று ஓடியது அவள் உடம்பில். அதன் உயிர்ப்பிக்கும் துளிகள் எங்கள்
மேனியில் பலமுறை சொட்டியது. தொடலில், வருடலில், எண்ணெய் தேய்க்கும்போது படும்
அழுத்தத்தில் அவள் உடம்பிலிருந்து கரை புரண்டு வரும் ஆற்றைப்போல் உயிர் வேகம்
தாக்கியது."

அத்தை இறுதியில் ஒரு மான் கதை சொல்லுகிறாள். கானகத்தில் அனைத்தையும் கண்டு
மருண்டு பயந்து வாழ்ந்த மான். திடீரென்று ஒரு நாள் நிலா வெளிச்சத்தில் அந்த
மானுக்கு "மந்திரக்கோல் பட்டது போல் பயம் போய்விட்டது. காடெல்லாம் சுற்றியது.
சாந்தமாக இருந்தது."

கதை கேட்ட குழந்தைகள் சாந்தப்பட்டுப் போயினர். "உறக்கக் கலக்கத்தில்
பார்த்தபோது எங்கள் நடுவே இரு கைகளையும் மார்பின் மேல் குறுக்காகப் போட்டுத் தன்
தோள்களை அணைத்தவாறு முட்டியின் மேல் சாய்ந்துகொண்டு தங்கம் அத்தை
உட்கார்ந்திருந்தாள்." அந்த சித்திரம் கண்களை விட்டும் மனதை விட்டும் விரைவில்
அகலும் சித்திரமல்ல.

"பிரசுரிக்கப் படாத கைப்பிரதி" மிகத் தீவிரமாக பெண்ணியம் உரைக்கும் கதை.
இதில் தன் கணவனின் கொடுமை தாளாது பிரிந்து வாழும் சுதந்திரக் கனல் உள்ள
பெண்ணை முற்றாக அவள் மகளின் கோணத்திலிருந்து காட்டியிருக்கிறார். ஓர் ஆணின்
காமம் மட்டுமே விரிவாகப் பேசப்படும் தமிழ் நவீன இலக்கியத்தில் (சங்க
இலக்கியத்தில் பசலை படர்வதும், மேகலை நெகிழ்வதும் பேசப்பட்டுள்ளது; நவீன
இலக்கியம் மட்டுமே முகம் திருப்பிக்கொண்டது) குலப் பெண்ணின் காமத்தை மென்மையாகப்
பேசுகிறார் அம்பை. "அப்போதே அவனை அணைத்து அந்தத் திண்ணையில் கிடக்க வேண்டும்
என்று தோன்றியதாம். பெண்களை எப்படி எப்படியோ கவிஞர்கள் வர்ணிக்கிறார்கள்.
ஆனால் ஒரு ஆணை எப்படிப் பார்க்கிறாள் பெண் என்று அன்றுதான் தெரிந்தது என்று அம்மா
விளக்கியிருந்தாள்."

உண்மையில் இந்தப் பெண்ணின் காமம் சொல்லும் முயற்சியில் அடியெடுத்து வைத்த அம்பை
விரைந்து அந்தக் காலைப் பின் வாங்கிக்கொண்டார் என்றே தெரிகிறது. அம்பையும்
மரபின் வரைகோட்டில் நின்று சடுகுடு ஆடி அவ்வப்போது தாண்டித் தாண்டிக் குதித்துத்
திரும்புவது தவிர்த்து உறுதியாகக் கோட்டை அழிப்பதில்லை. அழிப்பது நல்லதில்லை
என்றுதான் நினைக்கிறார்.

ஆனால் சில இடங்களில் அவர் பாத்திரங்கள் துணிந்து செயலாற்றுகிறார்கள். அதை
அம்பையும் கோபமும் வீறும் கலந்து எழுதுகிறார். "திருமகள் ஒரு வினாடி கூடத்
தாமதிக்கவில்லை. எழுந்து நாலு எட்டு நடந்து வலது காலால் அவன் கொட்டையில் ஓங்கி
ஒரு உதை விட்டாள்." அவள் கொட்டையில் உதைத்தது கணவனை. அது உதைக்க வேண்டிய
இடம்தான். ("வீட்டின் மூலையில்..." தொகுப்பிலும் "கொட்டை பலூன் மாதிரி
வீங்கி நாகப் பழக் கலர்ல பளபளன்னு இருந்திச்சி" ("கறுப்புக் குதிரைச் சதுக்கம்))

இந்தக் கதையில் ஒன்றுதான் நெருடல். ஒரு பதின்ம வயது மகள் தன் தாயைப்பற்றி
இவ்வளவு சார்பற்ற சிந்தனை (objective) உள்ளவளாக இருப்பாளா என்பதுதான்.
பதின்ம வயதுக் காலம் எதையும் தன்னை மையப்படுத்திச் சிந்திப்பது. இந்தப் பெண்
முற்றாகத் தன் தாயை மையப்படுத்தி சிந்திப்பது இயற்கையாக இல்லை.

(தொடரும்)