From eramurug@... Sun Nov 04 07:09:06 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 4 Nov 2001 15:09:06 -0000
Received: (qmail 90755 invoked from network); 4 Nov 2001 15:09:06 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 4 Nov 2001 15:09:06 -0000
Received: from unknown (HELO web14803.mail.yahoo.com) (216.136.224.219) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 4 Nov 2001 15:09:06 -0000
Message-ID: <20011104150906.54452.qmail@...>
Received: from [210.214.133.148] by web14803.mail.yahoo.com via HTTP; Sun, 04 Nov 2001 07:09:06 PST
Date: Sun, 4 Nov 2001 07:09:06 -0800 (PST)
Subject: oru payaNam..oru rAthiri..oru maNi neram...nAlu kOil - 1
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <9s3d73+ggcu@eGroups.com>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12841
ஒரு பயணம் -ஒரு ராத்திரி-ஒரு மணி நேரம் -நாலு கோவில் (பகுதி 1)
------------------------------------------------------
வாரம் முழுக்க வேலையில் மூழ்கி முத்தெடுத்து சனிக்கிழமை காலையில் வழக்கம்
போல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பும்போது இவள் சொன்னாள் : "
மதியம் ரெண்டு மணிக்குக் கும்பகோணம் போகணும்..நினைவிருக்கில்லே?"
"ஆபீஸிலிருந்து நேரா எழும்பூர் வந்திடறேன்"
"எக்மோர் எதுக்குப் போறது? வீடியோ பஸ். வீட்டு வாசல்லேயே
ஏறிக்கலாம். சாயந்திரம் ஆறரை ஏழு மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு
நேரத்துக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்"
வீடியோ பஸ். நினைத்தாலே வயிற்றில் ஒரு சங்கடம். முட்டிக் கொண்டு
வரும்போது நிறுத்த மாட்டார்கள். ஏதோ கண் காணாத இடத்தில் "பத்து
மினிட் வண்டி நிக்கும் சார்..காப்பி குடிக்கறவங்க குடிச்சுக்கலாம்" என்று
அறிவித்து ஒரு பெருங்கூட்டத்தை அற்பசங்கைக்காக இடம் தேடி ஓட வைப்பார்கள்.
வண்டிக்குள் சதா உச்ச ஸ்தாயியில் அலறும் சினிமா. மலேய
மொழிபெயர்ப்பில் கீழே தொடர்ந்து, 'அபாங்க்...அதாங்க்.." என்று ஏதோ
ஓடிக் கொண்டிருக்க பாச மழை பொழிந்து கூட்டுக் குடும்பம் பிரியும்.
வெனீஸில் கனவுக்கு ஆடி விட்டு, கொட்டாம்பட்டியில் ஆப்பம் சாப்பிடுவார்கள்.
"கார்லே போயிடலாம்"
எடுபடவில்லை. மழை காலத்தில் நானூறு கிலோமீட்டர் போக காரை எடுக்க
வேண்டாம். பஸ் தான் சரி.
இரண்டு மனிக்கு சொகுசு பஸ்ஸில் உட்கார்ந்தபோது ஏகப்பட்ட பேர்
விசாரித்தபடி இருந்தார்கள் "என்ன படம் இன்னிக்கு?"
நடத்துனரும் அடுத்தாளும் (ஒரு வாரமாக அகத்தியத்தில் எழுதாவிட்டாலும்
படிக்கிறேன்) மர்மப் புன்னகையோடு எல்லோரிடமும் கர்மசிரத்தையாகக்
கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். அதாவது நான், என் மனைவி,
கல்யாணத்துக்கு வரும் மாமிகள், முந்திய சீட் பாய், பர்தாவில் அவங்க
வீட்டம்மா, நாலைந்து சேட்டு வீட்டுக் கிழவிகள், சட்டைப் பையில்
சிகரெட் பாக்கெட் எட்டிப் பார்க்கும் இரண்டு இளைஞர்கள் இன்னும் யாராரோ
ஒன்றாகச் சேர்ந்து சுற்றுலா பஸ்ஸில் கும்பகோணம் இன்பச் சுற்றுலா
போகிறோமாம்.
சட்டம் கழுதை என்பது எத்தனையாவது தடவையாகவோ நிரூபணம் ஆகிறது.
கையில் கொண்டு வந்த புத்தகத்தை விரிக்கிறேன். தரவாட்டு நாயர்
ஸ்திரியின் அதிசௌந்தர்யத்தைக் கேள்விப்பட்டு தம்புரான ஆளனுப்பி
கோலோத்து அரண்மனைக்குக் கூட்டி வரச் சொல்கிறார். இருண்ட மண்டபங்களின்
வழியே மெல்ல நடந்து உள்ளே போகிற சுந்தரிப் பெண்குட்டி. வயதான
தம்புரான் ஜயண்ட் சைஸ் சாய்வு நாற்காலியில் இரண்டு பக்கத்திலும் இறக்கை
மாதிரி மரக்கைகளை நீட்டி வைத்து அதில் காலமர்த்திக் குறட்டை விட்டுத்
தூங்கிக் கொண்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட அதே நிலையில் புஷ்பேக் இருக்கையில் நானும். தூங்கிப்
போகிறேன்.
விழித்தபோது பண்ருட்டி, மீன்சுருட்டி, சேத்தியாதோப்பு என்று ஒவ்வொன்றாகக்
கடந்து போகிறது.
தமிழகத்தில் ஒரு ஊருக்கும் மற்றதுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்க்
கொண்டிருக்கிறது.
எல்லா ஊரிலும் கடை வீதியில் வரிசையாகக் கடைகளில் டியூப் லை
வெளிச்சத்தில் மும்முரமாகப் புரோட்டா சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கடைகளில் எல்லா வயது ஆண்களும் எச்சில் கையோடு அடுத்த புரோட்டாவுக்காகக்
காத்திருக்கிறார்கள். இவர்கள் ராத்திரி வீட்டில் ஏதாவது சாப்பிடுவார்களா
இல்லை தூக்குச் சட்டியில் வாங்கிப் போய்விடுவார்களா என்று தெரியவில்லை.
பேசாமல் புரோட்டாவைத் தமிழ்நாட்டின் தேசிய உணவாக அறிவித்து
விடலாம்.
புரோட்டாக்கடை வைத்தது போக மீதி இடத்தில் பேன்ஸி ஸ்டோர் கடைகள் -
தமிழகத்தின் கலாசார சின்னமான நீல நிற பிளாஸ்டிக் குடங்கள்
வரிசையாக அடுக்கி வைத்திருப்பது கண்ணில் படுகிறது. அப்புறம் கோல்ட்
கவரிங் கடைகள். எல்லாச் சுவர்களிலும் நகராட்சி, பஞ்சாயத்துத்
தேர்தலுக்காக இலை, சூரியன், சைக்கிள்...கேஸ் சிலிண்டர் சின்னத்தில்
கோவிந்தராஜனுக்கு ஓட்டுப் போடுங்கள்.
சேத்தியாதோப்பில் காதி வஸ்திராலயத்தில் அழுக்குப் பழுப்பு விளக்கு
வெளிச்சத்தில் ஒரு செய்தித்தாளில் வறுத்த கடலையைக் குவித்து வைத்து
மென்றபடி மூன்று பேர் காந்தி படத்துக்குக் கீழே சுவாரசியமாக விவாதித்துக்
கொண்டிருப்பது பின் லாடனா? தீபாவளி அட்வான்ஸா?
வடலூரில் வண்டி சுமார் வேகத்துடன் நகர, டாப்ளர் எபக்டில் ஒலிபெருக்கிச்
சத்தம் - "வள்ளல் பெருமான் அவதரித்த ஊரில் காண்ட்ராக்ட் ஊழல் என்றால் என்
நெஞ்சம் கொதிக்கிறது"
அண்ணே..ஆத்திரப் படாதீங்க.. கொஞ்சம் இப்படி உட்காருங்க..யாருப்பா
அங்கே..அண்ணனுக்கு சூடா ரெண்டு புரோட்டா, சால்னா, சின்னதா ஒரு மராமத்து
காண்ட்ராக்ட் ஏற்பாடு பண்ணுங்க..
ஒரு வழியாகக் கும்பகோணம்.
சைக்கிளில் போகிற சாஸ்திரிகள் மணியடித்துக் கொண்டே போகிறார்.
(வேறு எங்காவது பாவம் செய்தால் காசியில் விமோசனம். காசியில் பாவம்
செய்தால் கும்பகோணத்தில் விமோசனம். கும்பகோணத்தில் பாவம் செய்தால்
கும்பகோணத்தில் தான் விமோசனம்).
தி.ஜானகிராமனின் "மோகமுள்" நாவலில் இரண்டாம் பக்கத்தில் வாசனை
விடயம் மென்று கொண்டு சுலோகம் சொல்லும் சாஸ்திரிகள் நினைவுக்கு
வருகிறார்.
ஒரு ராத்திரிக்குள் கும்பகோணத்தில் பாவம் பண்ண முடியாது. விடயம்
கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.
மேலக் காவேரி பாணாத்துறை வடக்கு வழியாகப் போய்ச் சேர்ந்து,
சாப்பிட்டு, வார்த்தை சொல்லிக் கொண்டிருந்து விட்டு, மொட்டை மாடியில்
நட்சத்திரங்களுக்குக் கீழே பாய் விரித்துப் படுக்கிறேன். சுற்றித்
தென்னைமரங்கள், மலை வேம்பு, மா மரங்கள், எலுமிச்சை, தேக்கு மரம்,
நந்தியாவட்டை..எங்கேயோ மாதுளம்பூ விரியும் வாசம்.
"ராத்திரியில் திடீர்னு மரத்துலே பட்சி எல்லாம் ஒரு தினுசாக் கத்தும்.
எழுந்து பார்த்தா, சில சமயம் ஒரு மரத்திலிருந்து இன்னொண்ணுக்கு பாம்பு
தாவும்.."
மைத்துனன் சுவாரசியமாகச் சொல்கிறான். தென்னை மரங்களை நிமிர்ந்து
பார்க்கிறேன். ஒரு சத்தமும் இல்லை.
நீட்டி நிமிர்ந்து மல்லாக்கப் படுக்க, தலைமாட்டில் யாரோ கொசுவர்த்திச்
சுருள் ஏற்றி வைக்கிறார்கள். வரிசையாகப் பாய் விரித்துப் படுத்த ஆண்கள்.
எல்லோர் தலைமாட்டிலும் ஊதுபத்தி போல் கொசுவர்த்தி என்று கொஞ்சம்
அமானுஷ்யமான சூழல்.
பாதி ராத்திரியில் விழித்தபோது மரத்தில் ஆந்தை உட்கார்ந்து வெறித்துக்
கொண்டிருப்பது கண்ணில் படுகிறது. ஒரு கூட்டம் மின்மினிப் பூச்சிகள்
மாமரத்தைச் சுற்றி ஒளி வளையம் இட்டுப் பறந்து கொண்டிருக்கின்றன. குளிரக்
குளிர ஒரு காற்று மெல்லக் காது மடலைச் சிலிர்க்க வைக்கிறது.
இந்த ராத்திரி இப்படியே நீண்டு போகட்டும் என்று நினைத்தபடித் திரும்பக்
கண் அயர்கிறேன்.
(தொடரும்)
இரா.முருகன்
4-11-2001 (8:30 P.M)
__________________________________________________
Do You Yahoo!?
Find a job, post your resume.
http://careers.yahoo.com