From eramurug@... Sun Nov 04 08:15:12 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 4 Nov 2001 16:15:13 -0000
Received: (qmail 41199 invoked from network); 4 Nov 2001 16:15:13 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 4 Nov 2001 16:15:12 -0000
Received: from unknown (HELO web14804.mail.yahoo.com) (216.136.224.220) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 4 Nov 2001 16:15:11 -0000
Message-ID: <20011104161509.33467.qmail@...>
Received: from [210.214.128.196] by web14804.mail.yahoo.com via HTTP; Sun, 04 Nov 2001 08:15:09 PST
Date: Sun, 4 Nov 2001 08:15:09 -0800 (PST)
Subject: oru payaNam..oru rAthiri..oru maNi neram...nAlu kOil- 2
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011104150906.54452.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12842

ஒரு பயணம்-ஒரு ராத்திரி - ஒரு மணி நேரம் - நாலு கோவில் (2)
----------------------------------------------------

ஜோதிகா ஆட்டத்தோடு பொழுது விடிகிறது. டிவியை யாரோ கர்ம
சிரத்தையாக விடிந்து அஞ்சரை மணிக்குப் போட, கே சானலில் அந்தம்மா
தரிசனம்.

சானல் மாற்றி ஜெயாவில் தமிழ் சுப்ரபாதத்தோடு திருமலை. தினசரி
வருகிற ஒரே உற்சவத்தில், நரைமீசையும், தொப்பையுமாக கருப்பாக ஒரு
பட்டாச்சாரியார் பெருமாளோடு புஷ்கரணியில் முழுகிக் கொண்டிருக்கிறார்.

தினமலரில், தஞ்சையில் பிக்பாக்கெட் அடித்துப் பிடிபட்ட நான்கு பெண்களின்
புகைப்படம். முதல் பக்கத்தில் ஜெ-வுக்கு ஈமெயிலில் வந்த மிரட்டல்.

"குளிச்சிட்டு வாங்க..முகூர்த்தம் ஆரம்பிக்கறதுக்குள்ளே போகணும்"

கும்பகோணம் தெரு பூ வாடையும் சாண வாடையும், வெங்காய மண்டி வாடையுமாக
விரிகிறது. யமுனாவும், பாபுவும் தி.ஜானகிராமனும் நடந்த
தெருக்கள்..எம்.வி.வெங்கட்ராம் 'காதுகள்' பற்றி யோசித்தபடி நடைபோட்ட
வீதிகள்.. நண்பர் 'பறை' பொதியவெற்பன் இங்கே தான் எங்கேயோ
இருக்கிறார்.. எங்கே?

முகூர்த்தம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. பசியாறிவிட்டுக் கடியாரத்தைப்
பார்க்கிறேன். ஒரு மணி நேரத்துக்கு மேல் இருக்கிறது.

வழியில் போகிற ஆட்டோவை நிறுத்துகிறேன். "கோவிலுக்குப்
போகணும்.." எந்தக் கோவில். எல்லாக் கோவிலும் தான்.

"முகூர்த்தத்துக்கு லேட் ஆயிடும்" பட்டுப் புடவையில் இவள் வேண்டாம் என்கிறாள்.
"பக்கத்துலே ராகவேந்திரா கோவில் இருக்காம்..அங்கே வேணா போய்ட்டு
வந்திடலாம்"

ராகவேந்திரரை அப்புறம் தரிசித்துக் கொள்ளலாம். கும்பேசுவரரும்,
பெருமாளும் வரச் சொல்லித் தாக்கீது பிறப்பித்திருக்கிறார்கள்.

ஆட்டோ கிளம்புகிறது.

கும்பேசுவரர் கோவில். வழக்கமான 'கைலி அணிந்து கோவிலுக்குள்
வரக்கூடாது' அறிவிப்புப் பலகைக்குப் பக்கத்தில், "பால் பாக்கெட் அபிஷேகம்
செய்ய அனுமதி இல்லை"

பாங்காக்கில் இரவு விடுதி வாசலில் புத்தர் விக்ரகத்துக்குக் கீழே தகரக்
குடுவையில் கோக்கோ கோலா படையலாக வைத்திருப்பது நினைவு வருகிறது.

சுவரில் திருப்பதிகங்களில் மூழ்குகிறேன். இவள் கடியாரத்தைப் பார்க்கிறாள்.

"கூடிக்கூடி உன்னடியார்
குனிப்பார் சிரிப்பார் களிப்பாராய்
வாடிவாடி வழியற்றேன்
வற்றல்மரம் போல் நிற்பேனே"

"இங்கேயே நின்னுட்டிருந்தா எப்படி? சரசரன்னு முடிச்சுட்டுக் கல்யாண மண்டபம்
போக வேணாமா?"

பாரதியின் 'ஞானரதம்' கதையில் கிரணத்தைப் பிடித்துப் போகிறவன் போல்
உணர்கிறேன். ஆனால் இவள் "பொதிமாட்டைப் போன்ற ஸ்திரி" இல்லை.
அன்புக்குரிய மனைவி.

சுவரில் ஞானசம்பந்தர் அருளிச் செய்த திரு எழுகூற்றிருக்கை ரத பந்தமாக
வரையப்பட்டிருக்கிறது.

உள்ளே பிரகாரத்தில் சுந்தரர் 'விழிநோய் நீக்க வழி கூறிப் பாடிய
பதிகம்'. இடக்கண்ணுக்கான பதிகத்தைப் பதம் பிரித்துப் படித்து முடித்து அடுத்த
கண்ணுக்கு வருவதற்குள், "வாங்க போகலாம்.. ஊஞ்சல் ஆரம்பிச்சுடும்"

கும்பேசுவரர் கோவிலிலிருந்து புறப்பட்டு ஆட்டோ ராமசாமி கோவிலில்
நிற்கிறது. "பத்தே நிமிஷம்".. உள்ளே ஓடுகிறேன்.

தூணில் புடைப்புச் சிற்பமாக மூரிச்சிலைத் தடக்கையோடு கம்பீரமான
ராமபிரான். நெடிய அந்தத் திருமேனி முழுக்க எண்ணெய் முழுக்காட்டி
வைத்திருக்கிறார்கள்.

தூணின் அந்தப் பக்கத்தில் பிராட்டி. தூக்கிக் கட்டிய அழகான
தலையலங்காரத்துக்கு மேலே ஒட்டடை படிந்திருக்கிறது. எம்பி நீக்குகிறேன்.
அடுத்த பக்கத்தில் அனுமன். அழுக்குப் புரண்ட திரு உருவம். நாலாவது பக்கத்து
இலக்குவன் இருட்டிலும் தூசியிலும் பாதிதான் கண்ணில் படுகிறான்.

அடுத்த தூணில் ஒய்யாரமாக அன்ன வாகனத்தில் சாய்ந்திருக்கும் பெண்ணின்
சிற்பம். லேடி காடிவா போன்ற திண்ணென்ற உருவம். யார் அது? யட்சியா?

பட்டாச்சாரியார் திருவிளக்கு வெளிச்சத்தில் பெருமாளையும் பிராட்டியையும்
சேவிக்கச் சொல்லி காட்டுகிறார். வலது புறத்தில் கையில் வீணையும்
ராமாயணமுமாக அனுமன் கண்ணை ஈர்க்கிறான். வீணை வாசிக்கும் அனுமன் வேறு
எங்காவது உண்டா என்று தெரியவில்லை. ராமாயணத்தில் வீணைக் கொடியுடைய
ராவணன் மட்டும்தான் இசைஞானி என்று இத்தனை நாள் நினைத்திருந்தேன்.

"தொட்டிலில் குழந்தையாகப் பெருமாள். எடுத்துக் கையில் ஏழப் பண்ணினா,
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்"

பட்டாச்சாரியார் உன்னிப்பாகப் பார்க்கிறார். என் பிள்ளைகள் வீட்டில்
இருப்பதைச் சொல்ல வேண்டுமோ?

வாசலுக்கு வந்து ஆட்டோவில் ஏற, பக்கத்துப் பெட்டிக் கடையில் சத்தமாகப்
பேசிக் கொண்டிருக்கிறார்கள் - "கம்ப்யூட்டர்
லேசுப்பட்டதில்லே...பேக்டீரியான்னு கிருமி இருக்கு பாரு..அது கூட
கம்ப்யூட்டர் மூல்யமாப் பரவுதாம்"

கம்ப்யூட்டர் கிருமியை மனதிலிருந்து அகற்றி விட்டு, சாரங்கபாணி
கோவிலில் இறங்குகிறேன்.

கம்பீரமான விண்ணகரம். யானை இழுக்கும் கல்தேர் போல் பிரம்மாண்டமான
மண்டபம். தேர் நகர்வது போல் தெரிகிறது. பிரகாரச் சுவர்களில்
வரிசையாக ஓவியங்களில் ராமாயணம். நாயக்கர் பாணியிலிருந்து 'குமுதம்'
பத்திரிகையில் வரைந்த 'வர்ணம்' பாணி வரை இருக்கிறது. ஜெயராஜ் பட
சாயலில் யாரும் தட்டுப்படவில்லைதான்.

இந்தக் கோயில் சுவரிலும் ரதபந்தனம். "திருக்குடந்தை அந்தணர் மந்திர
மொழியுடன் வணங்க, ஆடரவமளியில் அணிதுயில்' திருமாலைக் குறித்துத்
திருமங்கை ஆழ்வார் பாடியது.

இயல்பான கவிஞர்களான சம்பந்தரையும், திருமங்கை மன்னனையும் கிராஸ்வேர்ட்
புதிர் போல் எழுத்து எண்ணிச் சதுரத்தில் அடைத்து ரதபந்தமும், நாக பந்தமும்,
பசுமூத்திர பந்தமும் மற்றதும் பாட வைத்த புண்ணியவான்கள் யார்?
'கொட்டாவி விட்டதெல்லாம் கூறு தமிழ்ப் பாட்டாச்சே" என்று இடைக்காலப்
புலவர்களைப் பற்றி எழுந்த எரிச்சல் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும்
மட்டும்தானா?

"ஊஞ்சல் முடிந்து மாலை மாற்று ஆரம்பித்திருக்கும்"

சக்ரபாணி கோவில். குடமுழுக்கு ஆகி வண்ணம் மினுக்கிக் கொண்டிருக்கும்
கோவிலில் நுழைந்ததும் நடுநாயகமாக ஏழு வண்ணம் கசியக் கசியச் சுதை
உருவத்தில் புதியதாக உருவாக்கிய பெருமாள். கோடம்பாக்கம் செட் போல்
இருக்கிறது அந்த இடம்.

பக்கத்தில் மரத்தாலான ஒரு பழைய பூத வாகனம். "போங்கடா நீங்களும் உங்க
குடமுழுக்கும்" என்று முதுகைக் காட்டிக் கொண்டு சுவரைப் பார்த்து
உட்கார்ந்திருக்கிறது பூதம்.. அதன் பக்கத்தில் வேறு ஏதோ மரச் சிற்பத்தின்
கையும், காலும் தனித்தனியாகச் சிதறிக் கிடக்கின்றன.

பழையதைப் பேணிவிட்டுக் குடமுழுக்கு நடத்தினால் குறைந்து போய்விடுமோ என்று
தெரியவில்லை.

சந்நிதிக்குப் போகும் வழியில் கம்பீரமான அந்த வெண்கல விக்கிரகம்
கருத்தை ஈர்க்கிறது. அடுக்கடுக்காகப் பட்டாடை விரிய உயர்ந்து நிற்கும்
மனிதர். பக்கத்தில் அவர் இடுப்பு உசரத்துக்கு ஒரு பெண்.

"சரபோஜியும் அவா ஆத்துக்காரியும்"

பட்டாச்சாரியார் சடாரி சாதித்தபடி சொல்கிறார். இங்கேயும் பெருமாள்
கையில் ஏழப் பண்ண (எழுந்தருளப் பண்ண)த் தயாராகக் குட்டித் தொட்டிலில்
இருக்கிறார். அவரை அப்புறம் கொஞ்சலாம் என்று இவள் கையைப் பிடித்து
இழுத்துப் போய் ஆட்டோவில் ஏற்றுகிறாள்.

சோலையப்பன் தெருவில் கல்யாணமண்டப வாசலில் வண்டி நிற்கிறது.
விதவிதமான சாயம் தோய்த்த சோற்று உருண்டைகள் உள்ளே இருந்து வந்து
காலில் தெறிக்கின்றன.

"ஊஞ்கல் ஆரம்பிச்சாச்சு" அரக்கப் பரக்க இவள் உள்ளே ஓட, நான் வாசலில்
நாற்காலியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இரா.முருகன்



__________________________________________________
Do You Yahoo!?
Find a job, post your resume.
http://careers.yahoo.com