From eramurug@... Fri Nov 09 09:27:30 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 9 Nov 2001 17:27:32 -0000
Received: (qmail 55224 invoked from network); 9 Nov 2001 17:27:32 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 9 Nov 2001 17:27:32 -0000
Received: from unknown (HELO web14809.mail.yahoo.com) (216.136.224.230) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Nov 2001 17:27:29 -0000
Message-ID: <20011109172729.79740.qmail@...>
Received: from [210.214.133.142] by web14809.mail.yahoo.com via HTTP; Fri, 09 Nov 2001 09:27:29 PST
Date: Fri, 9 Nov 2001 09:27:29 -0800 (PST)
Subject: Re: [agathiyar] DeepavaLi Marundhu/lEkiyam
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011109170652.0070faec@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12927
தீபாவளி மருந்து. இது என் பாட்டியம்மா ஸ்பெஷல் சமாசாரம்.
" கொழந்தே..ஆறுமுகம் செட்டியார் கடைக்கு ஒரு விசை ஓடிப்போய் இதெல்லாம்
வாங்கிண்டு வந்துடு..மணக்க மணக்க தீபாவளி மருந்த்து கிளறித் தரேன்.."
பாட்டி லிஸ்டில் புலிப்பாலையும் காண்டாமிருகக் கொம்பையும் தவிர மற்ற
எல்லாம் இருக்கும்.
தீபாவளிக்கு கணக்கு வாத்தியார் பட்டாசுக் கடை போட்டிருப்பார். அங்கே
நின்று வேடிக்கை பார்க்க விடாமல், சந்தோஷமாக எடுபிடி வேலை செய்ய
விடாமல், மளிகைக்கடைக்கு விரட்டப்படுவேன். நாட்டுச் சர்க்கரை,
பேரீச்சம்பழம், கடலெண்ணெய், திப்பிலி என்று யாராரோ வந்து வாங்கிக்
கொண்டு ஊர் வம்பு பேசிவிட்டுப் போக செட்டியார் என்னை நிற்க வைத்து
விடுவார். சாவகாசமாக பழைய தகர டப்பாக்களைத் திறந்து குப்பை
செத்தையாக தட்டிக் கொட்டி எடுத்து சின்னதும் பெரிசுமாகப் பொட்டலம் கட்டி
விட்டு, "பாட்டியம்மா கிட்டே ஆறுமுகத்துக்கு ஒரு கரண்டி மருந்து எடுத்து வைக்கச்
சொல்லு" என்று கையில் திணிப்பார்.
கடைவீதியில் இரண்டு சவுண்ட் சர்வீஸ் கடைகள். காலையிலிருந்து மதியம்
வரை ஒரு கடை, மதியத்திலிருந்து ராத்திரி வரை அடுத்த கடை என்று
பிரித்துக் கொண்டு தீபாவளிக்காக வர்த்தக ஒலிபரப்பு நடத்துவார்கள்.
"நாவிக்கினிய புரட்டாவுக்கு நாகநாதர் புரட்டா ஸ்டால்",
"கரு.பெரி.அடகுக்கடையில் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும்", "முட
வைத்திய சாலையில் கைகால் முறிவு சரி செய்யப்படும்..காது வளர்த்தது ஒட்ட
வைக்கப் படும்" "மூக்கக் கோனார் ஜவுளிக் கடையில் நவநாகரீகமான
ஜவுளிகள் தீபாவளிக்காக மலை போல் குவிந்துள்ளன" என்று வரிசையாக
இலங்கை வானொலி மாதிரி அறிவிப்புக்கள். "இலந்தப் பயம்", "
"பளிங்கினால் ஒரு மாளிகை", "அம்மனோ சாமியோ அத்தையோ
மாமியோ" போல இடை இடையே இசைத்தட்டு..ஓட்டைக் கடியாரத்தில் பார்த்து
நேரம் அறிவுப்பு.. எல்லாம் ரசித்துக் கொண்டே வீட்டுக்கு வந்தால், தேங்காய்
எண்ணெயும் நல்லெண்ணெயும் கமகமக்க ஆரம்பித்திருக்கும்.
தீபாவளிக்கு இரண்டு நாள் முன் குண்டு குண்டாக குமுதம் வரும். நல்லையா
மரப்பெட்டியில் வைத்து எடுத்து வரும்போது தெரு முழுக்க குணேகா செண்ட்
வாசனை. அச்சடிக்கும் மையில் குணேகா செண்ட் கலந்தோ என்னமோ தீபாவளிக்
குமுதம் வரும். அந்த வாடைக்கு ஈடாக மற்றொரு பத்திரிகை வாடையை நான்
முகர்ந்ததில்லை. குமுதத்திற்கு அப்போது குணேகா செண்ட் மணமாவது இருந்தது.
கிலோக்கணக்கில் கனக்கும் தீபாவளி மலர்களில் கலைமகளும், கல்கியும்
பதிவாக வீட்டில் வாங்குவது வழக்கம். கோபுலுவின் ஆர்ட் பேப்பர் ஓவியம்,
சங்கராச்சாரியார் படம், அருள் வாக்கு, தீபாவளிக்குக் கதை கேட்டு
நெருக்க, எழுத்தாளர்கள் அவசரத்தில் பிடித்த கொழுக்கட்டைக் கதைகள்
(பிற்காலத்தில் நானும் என் பங்குக்குப் பிடித்திருக்கிறேன்), தீபாவளிக்கு
மாமானார் வீட்டுக்கு வந்து தங்கி விட்ட மாப்பிள்ளைக்கு மாப்பிள்ளை
அங்கேயே தீபாவளிக்கு சீராட வருவது பற்றிய சாமா ஜோக் என்ற
சாகாவரம் பெற்ற தீபாவளி மலர் சமாச்சாரங்களோடு, சல்பேட் உரம்,
மோட்டார் பம்பு செட், சிட் பண்ட் விளம்பரங்கள்..
தினப்பத்திரிகைகளின் தீபாவளி இதழ்கள் வழக்கமான சவசவ..
முரசொலியும் விடுதலையும் தவிர மற்றப் பத்திரிகைகள் எல்லாம் தீபாவளி
சிறப்பிதழ் போடுவார்கள்.
தினமணியில் ஒரு தீபாவளி தவறாமல் சந்தக் கவிமணி தமிழழகன் "ஞான
விளக்கேற்றுவோம், தீப ஒளி போற்றுவோம்" என்கிற மாதிரி
சம்பிரதாயக் கவிதை எழுதியிருப்பார். கீழே சொக்கலால் ராம்சேட் பீடி
விளம்பரம் சுவாரசியமாக இருக்கும். தினத்தந்தியில் ஜெயசித்ராவும்
பிரமீளாவும், "தீபாவளிக்கு வென்னீரில் குளிப்பேன்" என்று பேட்டி
கொடுத்திருப்பார்கள். பக்கத்தில் போட்ட புகைப்படத்தில் வென்னீரில்
குளித்த பின்னால் ஏற்படுகிற சந்தோஷம் முகத்தில் தெரிய சேலை விலகினது
கூடத் தெரியாமல் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.
திருச்சி வானொலியில் தீபாவளிக்குச் சிறப்பு நிகழ்ச்சியாக ஸ்ரீவைகுண்டம்
எஸ்.எஸ்.பரமசிவம் பிள்ளையும், தென்னூர் கிருஷ்ணமூர்த்தியும், "வாங்க
கண்ணுச்சாமி..ஹெ..ஹெ..இன்னிக்குத் தீபாவளியாச்சே..
சாப்பிட்டீங்களா..விதர்பாவிலே சர்க்கரைத் தொழிற்சாலையைத் திறந்து
வைத்து உணவுப் பொருள் உற்பத்தியிலே நம்ம நாடு தன்னிறைவு அடையணும்னு நம்ம
பிரதமர் பேசியிருக்காரே...படிச்சீங்களா" என்று நாட்டு நடப்பு
நடத்துவார்கள். பரமசிவம் பிள்ளை கொஞ்ச நேரம் கழித்து பக்க
வாத்தியத்தோடு கர்நாடக சங்கீதக் கச்சேரி செய்வார். சாயந்திரம்
வாசகர் கடிதம் படிப்பார். ராத்திரியில் அகில பாரத நாடகத்தில்
"பிரிஜேஷ் சர்மா..உங்களைத் தூக்கித் தயிர்லே போடணும்" என்று எந்த
மொழியிலும் சிரிப்பு வராத ஜோக் அடித்து, கெக் கெக் என்று சிரிப்பார்.
அவர் குரலின் பலத்தில் தான் திருச்சி வானொலியே நடந்தது என்று
தோன்றுகிறது.
தீபாவளி மருந்தில் ஆரம்பித்து திருச்சி வானொலிக்குப்
போய்விட்டேனே...
தீபாவளி விடிகாலையில் யாரும் எழுப்பாமலேயே எழுந்து குளித்து ஒப்பேற்றி
விட்டு, புது டிரவுசர் மாட்டிக் கொள்ள அவசரம். வளர்கிற பையன் என்பதால்,
பாட்டியம்மா டிசைன் ஸ்பெசிபிகேஷன் கொடுக்க, கான் அப்துல் கபார்கான்
பைஜாமாவில் பாதியைக் கத்தரித்த மாதிரி தொளதொள என்று குருசாமி
டெய்லர் தைத்துக் கொடுத்திருப்பார். அந்த அற்புதமான கலைப்படைப்பை வாங்க
அவர் கடைக்கு நடக்கிற நடையை எல்லாம் சேர்த்தால் சிவகங்கையிலிருந்து
சென்னைக்கு மூன்று தடவை வந்து போனதற்குக் கொஞ்சம் குறைவாக இருக்கும்.
பை நிறைய ஆனைவெடியைத் திணித்துக் கொண்டு ஊதுபத்தியும் வத்திப்
பெட்டியுமாக நைசாக நழுவும்போது பாட்டியம்மா கிடுக்கிப் பிடியாகப் பிடித்து
வாயில் தீபாவளி மருந்தை உருட்டிப் போடுவாள். கொஞ்சம் இனிப்பு,
கொஞ்சம் உறைப்பு, கொஞ்சம் புளிப்பு என்று அதற்கு வினோதமான ருசி உண்டு.
அதற்குச் சமமான ருசி பிள்ளைப்பெற்றாள் லேகியத்துக்குத் தான் உண்டு.
அப்புறம் ஏகப்பட்ட வருடம் தீபாவளி கொண்டாடாமல் இருந்தாலும் (இப்போதும்
அப்படித்தான்) தீபாவளி மருந்து சாப்பிடுவதைத் தவற விட்டதில்லை.
இப்போது அடையாறு கிராண்ட் ஸ்வீட்டில் வீட்டுக்காரி தீபாவளி மருந்து
வாங்கி வந்து விடுகிறாள். என்ன தான் சொல்லுங்கள்..பாட்டியம்மா கிளறிக்
கொடுத்த மருந்தின் சுவைக்குப் பக்கத்தில் இது வருமா..அதில் இருக்கிற
பிரியம், கரிசனம் என்ற சேர்மானங்கள் எந்த ஆறுமுகம் செட்டியார் மளிகைக்
கடையில் கிடைக்கும்?
__________________________________________________
Do You Yahoo!?
Find a job, post your resume.
http://careers.yahoo.com