From eramurug@... Thu Nov 22 07:26:53 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 22 Nov 2001 15:26:53 -0000
Received: (qmail 70143 invoked from network); 22 Nov 2001 15:26:53 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 22 Nov 2001 15:26:53 -0000
Received: from unknown (HELO web14802.mail.yahoo.com) (216.136.224.218) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 22 Nov 2001 15:26:53 -0000
Message-ID: <20011122152652.44242.qmail@...>
Received: from [210.214.128.203] by web14802.mail.yahoo.com via HTTP; Thu, 22 Nov 2001 07:26:52 PST
Date: Thu, 22 Nov 2001 07:26:52 -0800 (PST)
Subject: Nool Vimarsanam - 'Inayathil JayBee'
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <9ti23e+n6u8@eGroups.com>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 13292

ஏன் இல்லை? இதோ.

நான் அண்மையில் எழுதிப் பிரபலமான பத்திரிகையொன்றில் பிரசுரிக்க
ஆயத்தப் படுத்தியுள்ள நூல் விமர்சனம்.

அகத்திய நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் வழக்கம்போல் மகிழ்ச்சி
அடைகிறேன்.

அன்புடன்,
இரா.முருகன்
------------------------------------------------------
இணையத்தில் ஜேய்பி' நூல் மதிப்புரை
இரா.முருகன்



தமிழர்களைப் பாராட்ட வேண்டும். வேறு எதற்காக இல்லாவிட்டாலும்
'இண்டர்நெட்'டை 'இணையம்' என்று அழகாக, ரத்தினச் சுருக்கமாகத் தமிழ்ப்
படுத்தியதற்கு.

பத்து ஆண்டுகளுக்கு முன் கணினிக்கான தமிழ் வரைவெழுத்துக்கள் உருவானதும்,
அவற்றைப் பயன்படுத்தி இணையத்தில் தமிழிலேயே விவாதிக்க மின்னஞ்சல்
குழுக்கள் தோன்றின. இந்த மடலாடு குழுக்களில் பங்கு பெற உறுப்பினராக
வேண்டும் (சந்தா எல்லாம் கிடையாது!). யாராவது ஓர் உறுப்பினர்
விவாதிக்க ஒரு திரியைக் கொளுத்திப் போடுவார் (discussion
thread என்பதன் தமிழ்ப் பதமாக 'திரி' என்று இணையத் தமிழில்
சொல்வது வழக்கம்). "பாரதி வள்ளலாரை விஞ்சி விட்டாரா" என்பது போல
பட்டி மன்றத் தலைப்பாகவோ, அல்லது 'தமிழில் தலைசிறந்த பத்து நாவல்கள்'
எவை என்றோ, "தமிழ் நாடகக் கலை வளர்ந்திருக்கிறதா?" என்பது
போலவோ இது இருக்கும். பங்கு பெறும் பலரும் அந்தத் தலைப்பில் தொடர்ந்து
எழுதுவார்கள். விவாதம் திசை திரும்பும்போது வழி நடத்தவோ, புதிய
திரிகளை நேரம் அறிந்து தொடங்கி அவற்றுக்கு மேலும் செறிவு சேர்க்கவோ
குழுவின் நடத்துனர் (moderator) முன்கை எடுப்பது வழக்கம்.

பல துறைகளிலும் அனுபவம் உள்ள நடத்துனர் உள்ள குழுக்களில் விவாதங்களும்
அவை விரியும் தளங்களும் குறிப்பிடும் படியாக இருக்கும். அகத்தியர் மடலாடு
குழுவின் (http://groups.yahoo.com/group/agathiyar)
நடத்துனரான மலேசியத் தமிழர் ஜெயபாரதி ஒரு மருத்துவர். அந்நாட்டில்
மருத்துவத் துறை இயக்குனராக ஓய்வு பெற்றவர். தமிழகத்திலும் மலேசியாவிலும்
வசித்து, இரண்டு நாடுகளிலும் நகர, கிராம வாழ்க்கை முறை பற்றி
நுணுக்கமான பட்டறிவும், இலக்கியம், கல்வெட்டு ஆராய்ச்சி, பழைய ஓலைச்
சுவடிகள், தமிழ்ச் சோதிடம், நாணயங்கள், இசை, ஓவியம், நாட்டார்
வாழ்வியல், சமயம் போன்று பல துறைகளில் பரந்து பட்ட திறமையும்,
நிறுவன, இயக்க ரீதியாக மலேசியத் தமிழர்களைக் கட்டமைத்து வழி
நடத்தும் அனுபவமும் கொண்டவர். மலேசியத் தமிழ்ப் பத்திரிகைகளில்
தொடர்ந்து எழுதும் பிரபலமான கட்டுரையாளரும், தொடர் சொற்பொழிவாளரும்
கூட.

அவருடைய இணைய எழுத்துக்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் 'இணையத்தில்
ஜேய்பி' தமிழில் முதல் இணைய இலக்கியம் என்று சொல்லலாம். எனக்குத்
தெரிந்து, முதல் பக்கத்தில் வெண்பா வடிவத்தில் காப்புச் செய்யுளும் நூல்
வாழ்த்துமாக வரும் கம்ப்யூட்டர் தொடர்பான புத்தகம் இதுவாகத்தான் இருக்கும்!
எங்கே புத்தகத்தைத் திறந்தாலும் உடனே படிக்க முடியும் விதத்தில்
தலைப்புகளும் தகவல்களும் சரசரவென்று விரிகின்றன.

'கேளுங்க தம்பி' என்று தோளில் கை போட்டு சொல்ல வந்ததை சகஜமாகப்
பகிர்ந்து கொள்ளும் கிராமப் பெரிசின் அன்னியோன்யம், நிறுத்த வேண்டிய
இடத்தில் "யோசியுங்க" என்று பொடி வைத்து முடிக்கும் லாவகம், கூடவே
இழைந்து வரும் நகைச்சுவை இவையெல்லாம் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டிய
பட்டியலில் சுலபமாகச் சேர்த்து விடுகின்றன.

இரட்டைப் பிள்ளையாரில் தொடங்கி கும்மென்று லாங்க் ஜம்ப் செய்து
இந்தோனேசியாவில் சுகர்ணோ ஆட்சியில் வெளியிடப்பட்ட விநாயகர் படம்
போட்ட கரன்சி நோட்டுக்களுக்குப் போகிற கட்டுரையென்றாலும், முதல் உலகப்
போர் காலத்தில் சென்னையில் குண்டு போட்ட 'எம்டன்' கப்பலில் ஆரம்பித்து,
'ஐந்தாம்படை', 'டன்கர்க் அடித்தல்' போன்று இரண்டாம் உலகப் போர்க்
காலத்தில் தமிழில் கலந்த சொல்வழக்குகளுக்கும், அவை பயன்படுத்தப்பட்ட
தமிழ் நாவல்களுக்கும் பாய்கிற மடல்கள் என்றாலும் ஜேய்பியின் நடையில் ஒரு
துள்ளல் தெரிகிறது.

எம்டன் காலத்திலிருந்து ஆயிரம் வருடத்தை சுளுவாகக் கழித்து விட்டு அடுத்த
பக்கத்தில் 'கங்கை கொண்ட சோழபுரம்' பற்றி முழுக்க முழுக்க வரலாற்று
ஆய்வாக விரிகிற மடல். ராஜேந்திர சோழர் பழையாறைக்குப் பக்கத்தில்
புதுத் தலைநகரைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்றால் இந்தா பிடி பதில்
- சோழ சாம்ராஜ்ஜியத்தின் துறைமுகங்களையும், முக்கிய நகரங்களையும் ஆகக்
குறைந்த பயணத்தில் அடையவும், சுற்றமும் நட்புமாக இருந்தாலும் கண்காணித்தே
ஆகவேண்டிய நெருங்கிய உறவின் குடியினரை சதா கண் பார்வையில்
வைத்திருக்கவும் தான்.

நாற்பத்தொன்று குற்றம் புரிந்து ஏழில் மாட்டி எதிரிகளிடமிருந்து
தப்பியோடிய குற்றவாளி சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் சந்தர்ப்பம்
தெரியாமல் ஒலிக்க மாட்டிக் கொண்ட சம்பவத்தை அவனை டிரக் அடிக்ட் ஆக
மீட்பு மையத்தில் வைத்து சிகிச்சை செய்த டாக்டர் ஜேய்பி விவரிப்பது
விறுவிறுப்பானது. அதற்குச் சமமான பரபரப்பு, ஜப்பானியத் தற்கொலை
வழக்கமான ஹரக்கிரி போல் தமிழ்நாட்டில் பழங்காலத்தில் நிலவிய
நவகண்டம் பற்றிய விவரங்களில் கிடைக்கிறது. சும்மா குடுமியை இறுகப்
பிடித்துக் கொண்டு தன் கழுத்தைத் தானே கரகரவென்று அறுத்துப் பலி கொடுத்துக்
கொண்ட வீரனின் சிற்பத்தையும் தேடிப் பிடித்துக் கூடவே படமாகத் தருகிறார்
ஆசிரியர்.

WWW (World Wide Web) என்பதை 'வையக விரிவு வலை' யாக இவர்
தமிழ்ப் படுத்தியது, மலேசியாவில் தமிழர்களைக் குறிப்பிட மற்றவர்கள்
பயன்படுத்தும் (கொஞ்சம் தாழ்வான அர்த்தத்தில்) 'கிளிங்'கின் பெயர்க்
காரணம் , கார்ல் சேகன், கல்லாடம், உடும்பு பிடித்தல், கணினி வேர்ச்சொல்
ஆய்வு, ஆட்கொல்லிச் செய்யுள், சாமுத்திரிகா லட்சணப்படியான பழைய
கே.ஆர். விஜயா, கார்கோ கல்ட் என்ற நூதன வழிபாடு, சங்க கால,
சங்கம் மருவிய கால ஔவையார்கள், புதுமைப்பித்தன் படைப்பிலக்கியம்..
மனிதர் ஒன்றைக்கூட விட்டு வைக்கவில்லை. கடலில் நீந்தாத யானையும்
பூனையும் இலங்கைத் தீவில் எப்படி வந்தன? தெரியாதவர்களுக்கு ஆறாயிரம்
ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலப்பாலம் பற்றிய விவரம் சொல்கிற கட்டுரையும்
உண்டு. ஆசிரியர் தேடித் தேடிச் சேர்த்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான
அபூர்வ பனையோலைச் சுவடிகளும், பழைய நாணயங்களும், மக்கிச் செல்லரித்துக்
கொண்டிருக்கும் புத்தகங்களும், டன் கணக்கில் எழுதி வைத்த ஆய்வுக்
குறிப்புக்களுக்கான கடுமையான உழைப்பும் இந்த மருத்துவரின் உடல் நலத்தையும்
பேங்க் பேலன்ஸையும் குறைத்தாலும் அவருடைய சகல விதமான தேட்டத்திற்கும்
தேர்வுக்கும் துணை நிற்கின்றன.

மலேசிய ரப்பர் எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்களோடு பழகிய நினைவுகள்,
அவர்களின் தமிழ் ("நேத்தாசி பெரிய யோகீசுபரருங்கய்யா..சர்மன்லேருந்து
கடலுக்கடியிலே மறஞ்சி மறஞ்சி அப்படியே சப்பான் போயி ஈரோயித்தோவப்
பாத்தவருங்க"), அவர்கள் வணங்கும் காந்தி சிலை (அவ்வப்போது உதிர்ந்து
போன இடத்தில் சிமெண்டைப் பூசி வர்ணமும் அடித்திருக்கிறார்கள்) என்று
சுவையான தகவல்கள் அந்தக் கடல் கடந்த இந்திய வம்சாவளியினரைக் கண்முன்
நிறுத்துகின்றன.

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் பட்டத்து ராணிக்குச் சிலை வைக்கச்
சிற்பி கல்லில் உளியால் செதுக்கும்போது தொடையில் பள்ளம் போல வடு
ஏற்பட்டதாம். சாமுத்திரிகா லட்சணப்படி ராணிக்கு அங்கே வடு இருக்கும் என்று
அரசப் பிரதானியார் சொல்லப்போக ரசாபாசமாகி அவர் கண்ணை அவரே
அவித்துக் கொண்டு பதவி துறந்து போன வ்ரலாற்றைக் கதை போல தருகிற
ஜேய்பி, மதுரையில் புதுமண்டபத்தில் தேடுதேடு என்று தேடி கோ ஆப்டெக்ஸ்
கடை போட்டு மறைத்த இடத்தில் அந்தச் சிலையையும்
கண்டுபிடித்திருக்கிறார்.

"பல சவுக்குக் கட்டை சாரங்களுக்கு இடையில் சிறைப்பட்டு, மின்சாரக்
கம்பிகள் பலவற்றில் சிக்கிப் பரிதவித்தவண்ணம், இருட்டின் பிரஜையாய்,
திருமலை நாயக்கர் தன் மனைவியர் பக்கவாட்டில் ஒளிந்திருந்து எட்டிப்
பார்க்க, பரிதாபமாய் கரங்கூப்பி வணங்கிக்கொண்டு நின்றார்".

தொடையில் பள்ளம் விழுந்த அந்தச் சிலையின் புகைப்படத்தைப் பார்த்தபடி
புத்தகத்தைப் படித்து முடித்த போது, ஜேய்பியின் இந்தக் கவித்துவமான வரிகள்
திரும்பத் திரும்ப நினைவு வருகின்றன. பன்னீர்செல்வம் ஆட்சியிலாவது
திருமலை நாயக்கர் விடுவிக்கப் பட்டு விட்டாரா?

இரா.முருகன்
(நவம்பர் 18, 2001)






--- Nagasubramanian Chokkanathan
wrote:
> அன்புள்ள அகத்தியர்களுக்கு,
>
> பலதுறை வித்தகர்களும், வாசகர்களும் நிறைந்திருக்கும் அகத்தியக்குழுவில்
> நூல் வி
> மர்சனங்கள் அதிகம் இல்லை என்பது ஆச்சரியம் தருகிறது !
>
> ஏன் ?
>
> என்றும் அன்புடன்,
> லாவண்யா ...


__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! GeoCities - quick and easy web site hosting, just $8.95/month.
http://geocities.yahoo.com/ps/info1