From poo@... Fri Nov 30 18:20:42 2001
Return-Path:
X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 1 Dec 2001 02:20:42 -0000
Received: (qmail 1909 invoked from network); 1 Dec 2001 02:20:40 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 1 Dec 2001 02:20:40 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.151) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 1 Dec 2001 02:20:39 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Sat, 1 Dec 2001 05:17:28 +0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.53.45]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Sat, 1 Dec 2001 05:19:47 +0300
Message-Id: <4.3.0.20011130150111.00cefda0@...>
X-Sender: poo/202.54.6.1@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Fri, 30 Nov 2001 15:07:25 +0300
To: tamil-ulagam@yahoogroups.com,tamil@...,agathiyar@yahoogroups.com
Subject: uRavukaL - 2
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 13576

அன்பிற்குரிய இணையத்தாருக்கு,

சென்ற மடலின் தொடர்ச்சி. இங்கே இரண்டாவது பகுதி

இனி அய், ஆய் போன்ற சொற்களுக்கு வருவோம். இது ஒரு நீண்ட பயணம்.

தமிழில் மூன்று சுட்டொலிகள் உண்டு. ஆ, ஈ, ஊ என மூன்று நெடில்களாகவும், அ, இ, உ என மூன்று
குறில்களாகவும் இவை ஒலிக்கப் படுகின்றன. சேய்மையில் உள்ளவை ஆ வென்றும், அண்மையில் உள்ளவை ஈ
என்றும், முன்மையில் உள்ளவை ஊ என்றும் குறிக்கப் பெறுகின்றன. சேய்மைக் கருத்தும், அண்மைக் கருத்தும்
தமிழகப் பேச்சில் இருந்தாலும், இந்த முன்மைக் கருத்தில் படர்க்கை என்பது ஈழத் தமிழர்கள் இடையே மட்டுமே
இருக்கிறது. அவன்/இவன்/உவன் என்ற சொற்களில் உவன் என்றால் யாரென்றே நம்மில் பலருக்கும் தெரியாது.

ஊ/உ என்பவை முன்னிலையில் உள்ள எல்லாப் பொருள்களையும் குறிக்கும். யான்/ஞான்/நான் என்ற வளர்ச்சி
போன்றே ஊன்/ஞூன்/நூன்/நீன்/நீ என்ற வளர்ச்சியும் தமிழ்/மலையாளப் பலுக்கல் முறையில் இயல்பானதுதான்.
இதே போல முன்னிலைப் பெயரின் வேற்றுமையடியும் உன்/ஞுன்/நுன்/நின் என்று வளரும். முன்னிலைப் பன்மையும்
ஊம்/ஞூம்/நூம்/நீம் என்று வளர்ந்து பின் இரட்டைப் பன்மையில் நீம்/நீங்கள் என்று வளரும். இரட்டைப்
பன்மையின் வேற்றுமையடியாக உங்கள்/ஞுங்கள்/நுங்கள்/நிங்கள் என்று வளரும். இங்கும் இரட்டை மெல்லொலியில்
மலையாளத்தில் ஒலிப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்த முன்னிலைச் சுட்டின் வளர்ச்சியாகப்பல சொற்கள் (பாவாணர் ஆய்வின் படி கிட்டத்தட்ட 75% தமிழ்ச்
சொற்கள்) கிளைத்துள்ளன.

"ஊய்" என்ற வீளை ஒலியைக் கிளப்பிக்கொண்டு, ஒரு மாட்டை, மாட்டு மந்தையை, மாட்டு வண்டியை,
விலங்குக் கூட்டத்தை விரட்டிக் கொண்டு போகிறோம் அல்லவா, இங்கும் முன்னிலைச் சுட்டொலிதான் முதலிடம்
பெறுகிறது.

இத்தகைய ஒலிப்பு, :"ஊய்" என்ற கூப்பாடு, விலங்கு வேட்டையில் எழுகிற இயற்கையான செயல். கூச்சல்
போட்டே விலங்குகளை விரட்ட முடியும் வேட்டையாடவும் முடியும். அந்தச் செயலாலே, ஊய்த்தல் என்ற வினைக்கு
செலுத்துவது, நடத்துவது, விரைவு என்ற பொருளெல்லாம் வருகிறது. அப்படி ஊய்த்து, ஊய்த்து, முடிவில் தளர்ந்தும்
போகிறோம். கீழே உள்ள சொல் தொகுதிகளைப் பாருங்கள்.

உய்த்தல் = முன் தள்ளல், செலுத்துதல்
ஊய்த்தல்>உகைத்தல்>அகைத்தல் = செலுத்துதல்
உய்தல்>ஒய்தல் = செலுத்தல்
ஓய்த்தல்>ஓய்ச்சல்>ஆய்ச்சல் = வேகம்
ஒய்>ஒய்யென = விரைவாக
ஓய்தல்>ஆய்தல்>அயர்தல்= தளர்தல்
ஆயம் = வருத்தம்
ஆயாதம்>ஆயாசம் = களைப்பு

ஒரு செயலில் ஊய்ந்த காரணத்தால் ஓய்ந்து போகிறோம்; தளர்ந்து போகிறோம். அந்த நிலை ஒய்வு என்று
ஆகிறது. இது இன்னம் நீண்டு, வாழ்விலே ஓய்ந்து போனால், "அவருக்கு என்னய்யா, எல்லாம் ஓய்ஞ்சு போச்சு;
ஆளு கதை அவ்வளவுதான்". வாழ்வில் ஓய்ந்துபோன நிலை ஒயுள்>ஆயுள்

இதே போல இன்னொரு பரிமாணத்தில் பார்த்தால், உய்>உயிர்; உயிர்த்தல் = மூச்சுவிடுதல் என்ற பொருள்
வருகிறது. (இதே உயிர் என்று பொருள் கொண்டு அதே பொழுது ஒரே மாதிரி ஒலி கொண்ட air என்ற
சொல்லை ஒட்டித்தான் இந்தையிரோப்பிய மொழிகளும் உள்ளன. தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய
மொழிகளுக்கும் உள்ள உறவைச் சொன்னால் ஏற்கத்தான் நாம் தயங்கிக் கொண்டே இருக்கிறோம். இது ஏதோ
செய்யக் கூடாத செயல் போல ஒதுங்கிக் கொண்டு இருக்கிறோம்.)

"உயிர்த்து" என்ற அழகான தமிழ்ச் சொல்லே, வழக்கம் போல உயிர்த்ரு>உயிர்ச்ரு>உச்சரு>உச்சரி என்றாகி
இன்று உச்சரித்தல் என்று சொல்லுகிறோம். அதாவது "வாயைத் திறந்து ஒலி கொடப்பா, காற்றை
வெளிவிடு" என்று பொருள்'

இன்னும் சில வளர்ச்சியைப் பாருங்கள்.

உய்ந்துதல்>உந்துதல் = முன் தள்ளல்
உய்க்கும் = கொண்டு செல்லும் "புற நின்று உய்க்கும் " - (புறம் 98:16)
உய்>ஒய். ஒய்தல் = செலுத்துதல் "உப்பொய் ஒழுகை" என்பது புறம் 116.
ஒய்யல் = செலுத்துகை (பிங்கலம்)
ஒய்>ஒயு>ஒசு = செலுத்து; ஓசுநர் = மரக்கலம் செலுத்துநர்
ஒய்>எய், எய்தல் = அம்பைச் செலுத்துதல்

இனிச் செலுத்துதல் என்பது 'கொண்டு போதல்' என்ற நீட்சி பெற்று புதிய பொருள்கொடுக்கும்.
ஊய் = கொண்டுபோதல்
ஊய்கின்ற (கொண்டு போகிற) பொருள் ஊயி>ஊசி. இது நுண்ணியதாகவும் கூர்மையானதாகவும் இருப்பதால் ஊய்
என்பதற்கு நுணுகுதல் என்ற பொருளும் மேற்கொண்டு வருகிறது.
ஊய்தல்>ஆய்தல் = நுணுகுதல்
ஆய்தம் = நுணுகிய ஒலி.
ஆய்தல் = நுணுகிப் பார்ப்பது; ஆர ஆய்வது ஆராய்ச்சி

இனி முன் தள்ளுவதில் இருந்து மேலே போவோம். முன்னே இருப்பது என்ற கருத்து காலப் பரிமாணம் கருதி
மேலோர் என்றும் பொருளைக் கொள்ளும். முன்னோர் என்னும் போது நமக்கு முந்தியவர்கள், மேலோர் என்ற
பொருளைக் கொள்ளுகிறோம். அதனாலேயே, ஊங்கு = முன்பு; ஊங்கணோர் = முன்னோர் என்ற பொருள்கள்
பெறுகின்றன.

நாளடைவில் ஊகாரமும், உகரமும் மேலானவை, உயர்ந்தவை என வளர்ச்சியுற்ற முறையில் கருத்துக்களைக்
குறிக்கின்றன. "உடம்பால் உயர்தலும் நிலைமையால் உயர்தலும் இடத்தால் உயர்தலும் என உயர்தல் மூன்று வகை"
என்பார் பாவாணர்.

உய்>உய்கு>உகு>உகப்பு = உயர்வு
"உகப்பே உயர்வு" என்பது தொல்காப்பியம். உரியியல், 8
உகளல் = உயர்தல்
உகு>உகை>உகைத்தல் = மேற்செலுத்தல், உகைத்தல்>அகைத்தல்
உகைத்தல், உச்சம் (நல்ல செந்தமிழ்ச் சொல்; வடமொழிச் சோதிய நூல்களில் பயிலப் படுகிறது), உக்கம்
(=உயர்ச்சி, முடி), உயரம், உப்புதல், உம்பர், உவணம், என்ற சொற்களை எண்ணிப் பார்க்கலாம்.
உக்கு>ஊக்கு = உயர்த்து; "என்னை ஊக்குவிக்க வேண்டும்" என்றால் "உயர்த்த வேண்டும்" என்று பொருள். ஒரு
பொருளை உயர்த்த வேண்டும் எண்ணும் போது "ஊம்" என்ற ஒலி எழுப்பிக் கொண்டே முயலுவதை நாம்
பார்த்திருப்போம்.
ஊக்கு>ஊங்கு>ஊங்கல் = ஆடுதல், மேலே போகவைக்கும் செயல், ஊங்கல்>ஊஞ்சல்
இதே போல, ஊய்>ஊயல்>ஊசல் (ஆங்கிலத்தில் ஊசலாட்டு oscillate ஆகும்)
உவச்சன்>ஓச்சன்>ஓசன் = தெய்வத்தை ஏத்துபவன்
உய்>உய்ந்நு>உந்நு>உன்னுதல் = உயரவெழுதல்
உய்யல்>ஒய்யல்=உயர்ச்சி, ஒய்யாரக் கொண்டை = உயர்ந்த கொண்டை
ஒயில் = உயரக் குதித்தாடும் கும்மி

பல மொழிகளில் உகரம் ஒகரமாகிப் பின் அகரமாவது இயற்கை. தமிழிலேயே மற்றவர் சொல்லுவதை ஓப்புக்
கொள்ளும் செயலைத் தானே ஊம் கொட்டுவது என்று சொல்லுகிறோம். ஊம்>உம் என்றுமாகி உடன்பாட்டு
இடைச்சொல்லைக் குறிக்கும். "அவனும் நானும் போனோம்" என்பது சேர்ந்த நிலையைக் குறிக்கும். இந்த ஊம்
என்பதே ஈழத்தமிழர் வாயில் "ஓம்" என்றுஒலிக்கிறது. "ஓம் போட்டால் என்னவெண்டு அருத்தம்?"
"சொல்லுங்கோவன்" "சரியெண்டு கேட்டுக் கொள்றன்" என்று அருத்தம். அதே "ஓம்" தமிழகத் தமிழர் வாயில்
"ஆம்" என்று ஒலிக்கும்.

ஊம்>ஓம்>ஆம். இது இன்னும் வடக்கே போய் ஹாம்>ஹாங் என்று ஒலிக்கும். எனவே ஊ>ஓ>ஆ ஆவது ஒன்றும் வியப்பு
இல்லை.

வேட்டுவ நிலையில் ஊய்த்துக் கொண்டு (செலுத்திக் கொண்டு) (அதாவது மேய்த்துக் கொண்டு) கூட்டத்தை
தலைமையேற்று நடத்துபவள் தாய்.

ஊய்>ஓய்>ஆய்

ஆய் என்பது செலுத்துதல், நடத்துதல், தலைவி என்றெல்லாம் இதனால் பொருள் கொள்ளும். பின் தாய்வழிக்
குமுகாயம் மாறித் தந்தைவழிக் குமுகாயம் வரும் போது அப்பன் ஆயன் ஆகிறான், அம்மை ஆயி ஆகிறாள். ஆயன்
என்பது மந்தைகளின் தலைவன் என்ற பொருளையும் கொள்ளுகிறது. ஆயின் கூட்டம் ஆயம்; அதாவது கணம்.

ஆயன்>அய்யன் = கூட்டுக் குடும்பத்தின் தலைவன். இன்றைக்கு இந்தச் சொல் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு
மாதிரிப் புழங்கும். எங்கள் பக்கத்தில் தந்தையின் தந்தையைக் குறிக்கிறது; தந்தையையும் குறிக்கிறது.
இன்னும் சில இடங்களில் அண்ணனைக் குறிக்கலாம்.

ஆயி>ஆயித்தி>ஆய்த்தி>ஆத்தி (அடி ஆத்தி, இவுக இவ்வளவு பேசுறாகளே!)
ஆத்தி>ஆத்தா (அடி ஆத்தா, இவளுக்கு இவ்வளவு வாயா?)

பின் தமிழில் பால் குறிக்கிற காலம் வந்தவுடன், ளகரம் பெண்மையைக் குறிக்க, அம்மா அம்மாள் ஆனாள்;
அக்கா அக்காள் ஆனாள்; ஆத்தா ஆத்தாள் ஆனாள் (பொத்தகம் புத்தகம் ஆனது போல பேச்சுத் தமிழ் தாங்க
முதல் வடிவம்; இலக்கியத் தமிழ் அப்புறம் தான்.)

இன்னும் வளர்ச்சியில் ஆயம் என்பது கூட்டுக் குடும்பத்தைக் குறித்து ஆயம்>ஆய்ம்>ஆம் என்று ஆனது. ஆமை உடைவன்
ஆமுடையான்; இவள் ஆமுடையாள். அது திரிந்து ஆம்படையான், ஆம்படையாள், ஆம்பிளையான், ஆம்பிளையாள்
என்றெல்லாம் ஆயிற்று. ஏற்கனவே பலமுறை நான் கூறியது போல C1V1 என்று தொடரும் பல சொற்கள்
C1v1C2v2 என்று விரிவது தமிழில் பெரிதும்உண்டு. பெரும்பாலும் C2 என்பது ககரமாகவே அதே பொழுது
ஹகரம் போலவே ஒலிக்கப் படுதல் உண்டு. ஆம்>அகம் என்று விரியும்; குடும்பம், வீடு என்ற பொருள்
கொள்ளும். ஆமுடையான் அகமுடையான் ஆவான்; ஆமுடையாள் அகமுடையாள் ஆவாள்.

இன்னொரு வகையில் ஆய்த்தி>ஆய்ச்சி>ஆச்சி ஆவாள். இவள் கூட்டுக் குடும்பத்தின் தலைவி. நெல்லைப் பக்கம்
தந்தையின் தாய் ஆச்சி எனப் படுவாள். எங்கள் பக்கம் வீட்டின் தலைவியும், அக்கையும் ஆச்சி எனப்
படுவார்கள். " பெரியாச்சி சொன்னாச் சொன்னதுதான்; அப்பறம் பேச்சுப் பேசிகிட்டு, வா புள்ளெ"

ஆயத்தின் தலைவன் ஆய்த்தன் என்றும் அழைக்கப் பட்டான். ஆய்த்தன்>அய்த்தன்>அத்தன் =தந்தை

"பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா " என்ற தேவாரப் பாடலில் சுந்தரர் "அத்தா" என்றும்
அழைக்கிறார் அல்லவா? அவன் இறைவன், தலைவன் என்பதால் இந்தப் பெயர் வருகிறது.

அம்மம்மா, அப்பப்பா, அம்மப்பா, அப்பம்மா, அத்தாச்சி - இப்படிப் பலவகையில் உறவுகள் பெருகும்.

மூன்றாவது பகுதியை அடுத்த மடலில் பார்ப்போம்.

அன்புடன்
இராம.கி.