From poo@... Sat Dec 15 04:19:03 2001
Return-Path: X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 15 Dec 2001 12:19:03 -0000
Received: (qmail 31833 invoked from network); 15 Dec 2001 12:19:03 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 15 Dec 2001 12:19:03 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 15 Dec 2001 12:19:02 -0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in (unknown [203.199.227.112]) by giasmd01.vsnl.net.in (Postfix) with ESMTP id 78D51E552; Sat, 15 Dec 2001 17:52:18 +0530 (IST)
Message-Id: <4.3.0.20011215152851.00d51c00@...>
X-Sender: poo/202.54.6.1@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Sat, 15 Dec 2001 15:33:01 +0300
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamil@...
Subject: Muu. va. vin katturai - oru miiL paarvai
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan Ramasamy X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 13988
அன்பிற்குரிய இணையத்தாருக்கு,
பேராசிரியர் மு.வ.வின் நூல்களால் ஈர்க்கப்பட்டவர்கள் ஏராளம். அவர்களில் நானும் ஒருவன். ஊருக்கு வந்து
3 நாட்கள் ஆகிப் பழைய பொத்தகங்களைக் குடைந்து கொண்டு இருந்தபோது, மு.வ.வின் "மொழிப்பற்று"
கிட்டியது. அதில் ஒரு கட்டுரை "இருவகைக்கேடுகள்." சும்மா இருக்க முடியாமல் மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.
கட்டுரை 1960 களின் தொடக்கத்தில் எழுதப் பட்டது எனினும், இன்றும் உயிருள்ளதாக இருக்கிறது, ஒருசில
மாற்றங்கள் தவிர. கட்டுரையைப் பற்றிய மீள்பார்வையைக் கடைசியில் எழுதுவேன்.
வடக்கும் தெற்குமாக ஒரு தெரு அமைந்திருக்கிறது. தெருவின் இடையே அடுத்தடுத்துள்ள வீடுகள் இரண்டின்
முற்றத்தில் இரண்டு மரங்கள் வளர்கின்றன. வடக்கே உள்ள வீட்டின் முன்புறத்தில் வளர்வது வேப்ப மரம். அதற்கு
அடுத்த தெற்கு வீட்டின் முன்புறத்தில் வளர்வது தென்னை மரம். இந்தத் தென்னை நல்லவிதையில் இருந்து முளை
கிளம்பி வளர்ந்து வருவது. உயர்ந்த வளமுள்ள நிலத்தில் தொன்று தொட்டுப் பயிரிட்டுப் பயன்படுத்திவரும் ஓர்
உழவர் ஆராய்ந்து எடுத்துக் கொடுத்த தேங்காய் நெற்றைக் கன்றாக்கி வளர்த்தார்கள் தெற்குவீட்டுக்காரர். அந்த
நெற்றையும், அது தோன்றிய இடத்தையும், அதைப் போற்றிக் காத்துத் தந்தவரின் பெருமையையும் நினைத்தாலும்
உள்ளம் பெருமிதம் எய்தும். ஆனால் அந்த வேப்ப மரத்தின் வரலாறு அப்படிப்பட்டது அல்ல. தென்னை நெற்றுத்
தந்தவரின் நிலத்திலேயே குப்பை கொட்டும் பள்ளத்தில் வேம்பின் தப்பு விதை விழுந்தது; அது முளைத்து
வளர்ந்து செடியாக இருந்தபோது அதைக் கொண்டு வந்து நட்டார் வடக்கு வீட்டுக்காரர். ஆகையால் அதன்
தோற்றத்திலும் தொடக்க வளர்ச்சியிலும் ஒரு பெருமையும் இல்லை. ஆனால் இன்று அந்த வேம்பு மரமாக வளர்ந்து
கிளைகள் செழித்து நாற்புறமும் பரவிப்பலர் விரும்பும் வகையில் நிழல் தருகிறது. உயர்வும் பழம்பெருமையும்
உடைய தென்னையோ மெல்ல மெல்ல வளர்ந்து, இன்னும் அந்த வேப்ப மர நிழலில் கட்டுண்டு கிடக்கிறது.
வடக்கு வீடு பெரிய வீடு; அந்த வீட்டில்வாழ்பவர்களுக்குத் தெருவிலும் நல்ல மதிப்பு இருக்கிறது. புதிய
மதிப்பே என்றாலும் பெரிய மதிப்பு இருக்கிறது. தெற்கு வீடு சின்ன வீடு; வீடு அழகாக
அமைந்திருக்கிறதே தவிர வீட்டில் உள்ளவர்கள் வாழத் தெரியாதவர்கள். வீட்டினுள் வாழும் ஏழெட்டுப் பேரும்
எந்நேரமும் வீண் வன்பும் துன்பும் செய்த படியே ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொண்டு சிதறுண்டு
கிடக்கிறார்கள்; ஆகையால் தெருவில் உள்ள்வர்கள் அவர்களை அவ்வளவாக மதிப்பதில்லை. வடக்கு வீட்டில்
ஆட்கள் பல இருக்கிறார்கள். அதில் முப்பது நாற்பது பேர் இருந்தும் எப்படியோ அவர்கள் ஒரு குடும்பமாக
ஒன்றுபட்டு வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் ஏய்க்காமல், பொறாமை கொள்ளாமல் எப்படியோ கூடிவாழ்ந்து
வல்லவர்களாக இருக்கிறார்கள்.
ஒற்றுமை குலைந்து சீர்கெட்டு வாழும் தெற்கு வீட்டார் தம் குறையை எண்ணிப் பார்ப்பதே இல்லை. ஆனால்
எந்நேரமும் தென்னை நெற்றின் பெருமையையும், அதைத் தந்தவரின் தூய அன்பையுமே புகழ்ந்து சொல்லிக் காலம்
கழிக்கிறார்கள். அடுத்த வீட்டு வேப்பமரம், குப்பையில் முளைத்த செடி என்று அதன் பழைய வரலாற்றைச்
சொல்லிச் சொல்லி எள்ளி நகையாடுகிறார்கள்.
வேப்ப மரமோ இவ்ர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. நிலத்திலுள்ள சத்தை உறிஞ்சி வளர்ந்த
படியே இருக்கிறது. வடக்கு வீடு முழுவதையும் மறைத்து நிழல் கொடுக்கும் அளவிற்குச் செழித்து வளர்ந்ததோடு
நிற்காமல் தெற்குப் பக்கமாகவும் பல கிளைகளை நீட்டி வளர்ந்து நிழல் கொடுக்கத் தொடங்கிவிட்டது. இனி
இந்த வேப்ப மரத்திற்கு நீரும் தேவையில்லை; உரமும் தேவையில்லை. இரண்டு ஆண்டுகள் மழையே பெய்யாமல்
காய்ந்தாலும் வாழவல்ல வளர்ச்சியை அதுபெற்றுவிட்டது. ஆனாலும், வீட்டார் அதைக் கண்ணும் கருத்துமாகக்
காப்பாற்றுகிறார்கள். நாள்தோறும் நீர் வார்க்கிறார்கள். வாரந்தோறும் உரம் இடுகிறார்கள். ஆடுகள் வந்து
எட்டி வாய் வைக்காத உயரத்திற்கு அது வளர்ந்திருக்கிறது. அவ்வாறு இருந்தும், அந்த வீட்டுக்காரர் வன்மையான
வேலியும் இட்டுக் காப்பாற்றுகிறார்கள்.
தெற்கு வீட்டுக்காரரோ, எந்நேரமும் வீட்டுக்குள் இருந்து எதேனும் குழப்பம் செய்தபடி இருக்கின்றனரே
அல்லாமல், இந்தத் தென்னையின் வளர்ச்சிக்கு வேண்டிய நீரையும் ஒழுங்காகப் பாய்ச்சுவதில்லை; உரமும்
இடுவதில்லை. என்றோ ஒருநாள் எதையாவது செய்துவிட்டுக் கடமையைச் செய்து விட்டதாக எண்ணிக் கொண்டு,
அடுத்து வாய்க்கக் கூடிய சண்டை சச்சரவுகளில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த இரண்டு வீடுகளின் எதிரே ஒரு பெரிய பந்தல் உள்ளது. அது எதிர்வீட்டுக்காரர் போட்ட பந்தல்.
வேப்பமரம் வளர்ந்து நிழல் தருவதற்கு முன், தெற்கு வீட்டாரும், வ்டக்குவீட்டாரும் அடிக்கடி அந்தப் பந்தலின்
நிழலில்தான் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்; அந்த இரண்டுவீட்டுச் சிறுவர்களும் அந்தப் பந்தலின் நிழலில்
தான் விளையாடிக் காலம் கழித்தனர். எதிர்வீட்டுக்காரர் முன்னே பெரிய செல்வமும் செல்வாக்கும்
உடையவராய் வாழ்ந்தபோது அந்தப் பந்தலைப் போட்டார். இப்பொழுது அவருடைய வாழ்க்கையில் எப்படியோ
வறுமை வந்துவிட்டது. அந்தப் பந்தலைப் பழுது பார்க்கவும் ஆற்றலற்றவராகிவிட்டார் அவர். கடைசியில்
எதிர்வீட்டைக் காலிசெய்து விட்டு வேறிடத்திற்குப் போய்விட்டார்.
வேப்பமரம் வளர்ந்து நிழல் தரத் தொடங்கியபின், வடக்கு வீட்டார் இனி அந்தப் பந்தல் வேண்டியதில்லை என
எண்ணினார். பந்தலைப் பிரித்துவிட வேண்டும் என்று துணிந்தார். எதிர்வீட்டுக்காரரோ "நீங்கள்
எப்படியாவது செய்துகொள்ளுங்கள். இனிமேல் எதுவும் உங்கள் விருப்பம். நான் அங்கேகுடியிருக்கவில்லை.
ஆகையால் எப்படியாவது செய்யுங்கள்" என்றார். பந்தலோ பெரிய பந்தல், வடக்குப்பகுதியைப் பிரித்துத்
தெற்குப் பகுதியைப் பிரிக்காமல் இருக்கமுடியாது. ஆகவே வடக்கு வீட்டார் தெற்கு வீட்டாரை அணுகி,
"அய்யா, இனிமேல் எதிர்வீட்டுப் பந்தல் வேண்டா, நிழல் வேண்டுமானால் நம் இனி இந்த வேப்பமரத்தின்
நிழலிலேயே இருக்கலாம். நம் இரண்டு வீட்டுப் பிள்ளைகளும் இந்த நிழலிலேயேவிளையாடுவார்கள். நிழல்
இப்போது பரப்பாக இல்லாவிட்டாலும் வர வரப் பெருகிவிடும். தவிர, இது நம் சொந்த நிழல்;
அந்நியரின் பந்தல் அல்ல. அன்றியும், வேப்ப மரத்தின் நிழல் நல்லது. வடக்கு வீட்டாரின் நிழல் நமக்கு
உதவுமா என்று நீங்கள் எண்ண வேண்டா. இதோ பாருங்கள்! உங்கள் வீட்டுப் பக்கமாகத் தெற்கு நோக்கி
எத்தனை கிளைகள் நீண்டு வளர்ந்து வருகின்றன. இவற்றை நீங்கள் உங்கள் சொந்தமாக எண்ணிப் போற்ற
வேண்டும்" என்றார்.
தெற்கு வீட்டார் ஆத்திரப் பட்டார்; கொதித்தார். "நாங்கள் அந்தப் பந்தலைப் பிரிக்க மாட்டோம்.
இதுவரையில் நாங்கள் அந்தப் பந்தலின் நிழலில் வளர்ந்துதான் முன்னேறினோம்.இனியும் அப்படித்தான்
செய்வோம். நீங்கள் பிரித்தாலும் நாங்கள் பிரிக்க மாட்டோம். உங்கள் வேப்பமர நிழல் எங்களுக்கு
வேண்டா. அது உங்களுக்குச் சொந்தம் ஆயினும் எங்களுக்கு அந்நியப் பொருளே. உங்கள் கிளையை தெற்குப்
பக்கமாக வரவிடாதீர்கள். வந்தால் வெட்டித் தொலைப்போம். வீண் வன்பாக முடியும். இப்போதே
சொல்லிவைக்கிறோம். எங்கள் தென்னைபழையது. உயர்ந்தது. பயனுள்ளது" என்று சினம் அடங்கினார்.
இவருக்குத் துணையாக இன்னொருவர் பேசத்தொடங்கி, "மரத்தின் நிழல் நாகரிகமானது அல்ல. பந்தல்தான்
நாகரிகம். அது தான் உலகம் எங்கும் உள்ளது. அதை அழிக்க உங்களால் முடியாது. பந்தலால் எவ்வளவோ பயன்
பெற்றிருக்கிறோம். இப்போது அதைப் பிரிப்பது அறியாமை" என்று வெவ்வேறு வகையாக அதே கருத்தை
எடுத்துரைத்தார்.
இவற்றைக் கேட்டுக் கொண்டேயிருந்து வடக்கு வீட்டில் இருந்து வேறு இருவர் வந்தார்கள். "இவ்வளவு தொல்லை
ஏன்? இந்த வேப்ப மரம், அந்தத் தென்னை மரம், தெருவில் உள்ள மற்ற மரங்கள் எல்லாவற்றிற்கும் நீர் ஊட்டிப்
புரப்பது மழைதான். அந்த மழை மேகம் உலகம் தோன்றிய நாள் முதல் வானத்தில் உலாவியபடியே நம்
எல்லோருக்கும் நிழல் கொடுத்துவருகிறது. அதனால்தான் அதைத் தேவ நிழல் என்றும் முனிவர்கள்
சொல்லியிருக்கிறார்கள். அதுவே போதும். அதனுடைய பெருமைதான் பெருமை. அதுதான் உலகத்திலே
பண்பட்டது.அதை மட்டும் போற்றுவோம். மற்ற மரங்கள், பந்தல் எல்லாம் அதன் கீழ் இருக்கட்டும்" என்றார்கள்.
தெற்கு வீட்டார்க்கு இது மேலும் கொதிப்பை வளர்த்தது. "வானத்தில் திரியும் மேகம், நிழல்
தருவதற்காகவா ஏற்பட்டது? அதன் நிழலை நம்பி நாம் வாழ்க்கை நடத்தமுடியுமா? உங்களுக்கு இவ்வளவு வெறி
இருக்கும் என்று எங்களுக்கு முன்னமே தெரியாது போயிற்று. உலகமெல்லாம் ஒன்று, உயர்வு தாழ்வே இல்லை என்று
உதட்டில் பேசுகிறீர்கள். உள்ளத்தில் இவ்வளவு வெறி கொண்டு வாழ்கிறீர்களே" என்று கடிந்துரைத்தார்.
இத்தனை பேச்சுக்களையும் பொருட்படுத்தாமல் அந்தப் பந்தலின் கால்கள் கரையானுக்கு இரையாகி வருகின்றன;
மூங்கில்கள் உளுத்து வருகின்றன வேப்பமரமோ யாருடைய பேச்சையும் பொருட்படுத்தாமல், நாளொரு மேனியாய்
விரைந்து வளர்ந்து, தன் நிழலைப் பெருக்கிவருகிறது. தென்னை மரமோ போதிய நீரும் பெறாமல், உரமும்
இல்லாமல், வீட்டாரின் குழப்பத்திற்கு இடையே கூழையாய்ப் பொலிவிழந்து வாடி நிற்கிறது.
இதுதான் நம் நட்டின் இன்றைய மொழிச் சிக்கல்.
இந்தி மொழி வேகமாகப் பரப்பப் பட்டுவருகிறது. தமிழ் மொழியைக் காக்கக் கடமைப் பட்டவர்கள்
பிணக்கிலும் பூசலிலும் காலம் கழித்து வருகின்றனர். செல்வாக்குத் தளர்ந்துவரும்ஆங்கிலத்தை மட்டும் இழுத்துப்
பிடித்து வைக்க முயல்கிறார்கள். இவற்றிற்கு இடையே செயற்கைக் கற்பனை மொழியான வடமொழிக்கு ஆட்சித்
தலைமை பெற்றுத் தர வாய்ப்புக் கிடைக்குமா என்று சிலர் ஏங்கி நிற்கின்றனர்.
மற்றவர்களைப் பற்றிக் கவலை இல்லை. தமிழர் என்ன செய்ய வேண்டும்?
என்ன செய்கின்றனர்?
விளைவு என்ன ஆகும்?
பழி யாரைச் சாரும்?
தமிழர் இன்று செய்ய்த் தகாத செயலில் ஈடுபட்டுத் தம் வலிமையைக் குறைத்துக் கொள்ளலாகாது. 'ஒன்றுபட்டால்
உண்டு வாழ்வே' என்னும் உண்மையை எவர் மறந்தாலும் மறக்கலாம்; சிறுபான்மையோர்மறக்கலாகாது.
மொழிவகையில் தமிழர் சிறுபான்மையோர்தான்; தமிழ் ஒரு காலத்தில் இமயம் முதல் குமரிமலை
பஃறுளியாறு வரையில் பரவியிருந்த பெருமொழிதான்; ஆனால் இன்று தென்னிந்தியாவில் இரண்டரைக் கோடி
மக்கள் மட்டுமே பேசும் மொழியாக - சிறுபான்மையோரின் மொழியாக - குறுகிவிட்டது. இந்த நிலையில்
தமிழ் மொழி வாழ வேண்டுமானால் தமிழர் ஒன்றுபட்டு முழங்க வேண்டும்; ஒன்றுபட்டு வ்ழக்காட வேண்டும்.
இல்லையேல், இந்தி மத்திய அரசாங்க மொழியாக மட்டும் நிற்காமல் ஆங்கிலம்போல் அரசினர்
மொழியாகவும் போதனை மொழியாகவும் திணிக்கப் படுவது உறுதி. அப்போது பழிக்கு உரியவர் யார்?
ஒற்றுமை குலைந்து மொழியைக் காக்க வகை அறியாமல் கைவிட்டு இந்தத் தலைமுறையில் வாழ்ந்த தமிழரே
பழிக்கப் படுவர்.
இன்றைய நிலையில் தமிழர் பிற மொழிகளைப் பழித்துப் பேசியும் வெறுத்துப்பேசியும் ஆறுதல் அடைவதில்
பயனில்லை. பிறரை வெறுப்பதில் உள்ள ஆர்வத்தில் ஒருபாதியையாவது நம்மவரை விரும்புவதில் உள்ளதா என்று
பார்த்துக் கொள்ளவேண்டும். கடைத்தெரு முதல் பல்கலைக் கழ்கம் வரையில் தமிழர்க்குத் தமிழ் மொழியில்
பற்று உள்ளது என்பதற்குச் சான்றுகள் வேண்டும். நான்கு பேர் கூடினால் தமிழில் பேசக் கூசுவது, தமிழில் கடிதம்
எழுத நாணுவது, தமிழை போதனா மொழியாகக் கொள்ளத் தயங்குவது ஆகிய இவற்றையே இன்று தமிழகம்
காண்கிறது.
ஆங்கிலம் போதனை மொழியாக (Medium of instruction) இருக்க வேண்டும் என்ற நிலை மற்ற
மாகாணங்களில் மாறிவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் தான் ஆங்கிலத்தின் வாயிலாகப் பாடங்களைக்
கற்பிக்கும் வகுப்புகளுக்குச் செல்வாக்கு மிகுதியாக உள்ளது. ஆங்கிலம் போதனை மொழியாக உள்ள
வகுப்புகளிலே பிள்ளைகளைச் சேர்க்கப் பெற்றோர்கள் இந்நாட்டில் முனைந்து படுபடுகிறார்கள். பல்கலைக்
கழகங்களில் தமிழ் போதனை மொழியாக ஆக முடியாது என்று துணிந்து கூறும் அஞ்சாமையும் தமிழர்க்குத்தான்
உள்ளது. "உங்கள் தாய் மொழியிலே பாடங்களைக் கற்றுக் கொள்ள உங்களால் முடியும்" என்று மற்றவர்கள்
சொல்லும் போதும், "எங்கள் தாய் மொழியால் முடியவே முடியாது" என்று கூறும் நாக்குஇந்தத் தமிழ்நாட்டில்
பலர்க்கு அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் அதிகாரிகள் பலர் ஆங்கிலத்தின்உயிர்வாழ்வுக்குப் பொறுப்பு
ஏற்றுக் கொண்டு மார்தட்டி நிற்கிறார்கள். இவர்களில் பலர்க்குத் தமிழன்பு இல்லை என்பதை எண்ணும் போது,
இந்நாட்டின் பிற்போக்கு நிலை தெளிவாகிறது. ஆங்கிலம் அறிவு மொழியாக இருக்க வெண்டும் என்று கூறுதல்
பொருந்தும்; அது அந்த நிலையில் இன்றியமையாதது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் ஆங்கிலமே
போதனை மொழியாக நீடு விளங்க வேண்டும் என்று கூறும்போதுதான், அவர்களுக்கு ஆங்கிலத்தில் உள்ள
மோகம், தேம்ஸ் நதிக்கரையில் உள்ளவர்களின் பற்றை விட மிகுதி என்று தெரிகிறது. இதன் பயனாக
நாட்டின் இளைஞர்களின் வாழ்வில் விளையும் தீமை எத்தகையது என்பதை இவர்கள் எண்ணிப் பார்ப்பதே இல்லை.
உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலும் மாணவர்கள் அறிவை வளர்ப்பதை மறந்து ஆங்கிலச்
சொற்களையும், சொற்றொடர்களையும் நெட்டுருப் போடுவதிலேயே பெரும்பங்கான காலத்தைச்
செல்விடுகிறார்கள். அறிவை வளர்ப்பதற்கு உரிய இள மூளைகள், சொற்களையும் சொற்றொடர்களையும்
கற்பதில் இடர்ப்பட்டு வருந்துகின்றன. கடைசியில் திக்கற்ற தாய்மொழியும் வளராமல், 'அருமை' ஆங்கிலமும்
வளராமல், அறிவும் வளராமல், உடம்பும் உரம் பெறாமல் காலத்தை வீணே கழித்து கல்லூரிகளை விட்டு
வெளியேறுகிறார்கள்.
மற்றுமொன்று: ஆண்டுதோறும் தேர்வில் தவறிவிடும் தமிழ் மாணவர்களில் எத்தனை பேர் ஆங்கிலத் தேர்வில்
போதிய எண்கள் (மார்க்குகள்) பெறாத காரணத்தால் தவறுகின்றார்கள் என்பதைக் கணக்கெடுத்துப் பார்த்தால்,
தமிழ் நாட்டு இளைஞர்கள் எவ்வளவு கொடுமைக்கு ஆளாகியுள்ளார்கள் என்பது விளங்கும். ஆங்கிலத் தேர்வில்
போதுமான எண் (மார்க்கு) வாங்க முடியாதகாரணத்தால் தவறுகின்றவர்களே, எஸ்.எஸ்.எல்.சி.,
இண்டர்மீடியட், பி.ஏ., பி.எஸ்.சி., பி.ஏ. ஆனர்ஸ் என்னும் தேர்வுகளில் பெரும்பாலோராக உள்ளனர்.
தமிழர் இயற்கையாகவே அறிவுக் கூர்மைபெற்ற இனமாக இருந்தும், ஆங்கிலத் தேர்வு முறை அவர்களை அல்லற்
படுத்துகிறது. அவர்களில் உடல்நலமும் மன நலமும் கெட்டுத் தேர்வுகளில் தவறித் தவறி இடர்ப்பட்டு இளமையின்
ஊக்கத்தைப் பாழ்படுத்திக் கொள்வதற்கு ஆங்கிலத் தேர்வுகளே காரணமாகின்றன.
ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்டுத் தமிழர் பட்ட தொல்லைகளைவிட ஆங்கிலத்திற்கு அடிமைப்பட்டுத் தமிழ் இளைஞர்
படும் தொல்லைகள் மிகுதியாக உள்ளன; இதற்குக் காரணம் ஆங்கிலேயர் அல்ல; அறிவு மொழியாகிய
ஆங்கிலமும் அல்ல; தமிழ்ப் பற்று இல்லாத தமிழர்க்கு உள்ள ஆங்கில மோகமே ஆகும்.
தாய் மொழியில் தான் பிழையில்லாமல் பேசவும் எழுதவும் முடியும் என்று உளநூல் அறிஞர், மொழிநூல் அறிஞர்
பலரும் எடுத்துரைக்கின்றனர். எச்.ஜி.வெல்ஸ் முதலான ஆங்கிலேயரும் எடுத்துரைத்துச் சென்றனர். ஆங்கில
நாட்டுக் கல்வி அதிகாரிகளும் உரைக்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டுத் தமிழர்க்கு இன்னும் அந்தத் தெளிவு
பிறக்கவில்லை. ஆங்கில மோகம் அவர்களின் கண்ணை மறைக்கிறது. ஆங்கிலத்தில் ஆங்கிலேயர் போல்
பேசவும் எழுதவும் வேண்டும் என்று இவர்கள் வற்புறுத்துகின்றார்கள். அவ்வாறு பிழையற்ற ஆங்கிலம் எழுத வராத
தமிழ் இளைஞர்கள் மேல் வகுப்புக்குத் தேற முடியாது என்று அவர்களின் வாழ்வுக்கு இடையூறு செய்து தேர்வுகளில்
மட்டம் தட்டுகின்றனர். யார்? ஆங்கிலேயர்கள் அல்ல; தமிழ்நாட்டுத் தமிழர்கள்.
வங்காளியர், ஜப்பானியர் முதலான மற்ற நாட்டு மக்கள் ஆங்கில மொழியை அறிவு வ்ளர்ச்சிக்கு உதவும்
கருவியாகப் பயன் படுத்திக் கொள்கின்றனர். ஆனால், தமிழர் ஆங்கில மொழியின் மேல் உள்ள
மோகத்தால், அறிவை வளர்க்க முடியாமல் அல்லல் பட்டுப் பயனை இழக்கின்றனர். ஆங்கிலம் பிறர்க்குப் பயன்
தரும் கருவியாக உள்ளது; தமிழர்க்கோ தடை படுத்தும் கருவியாக உள்ளது. மற்றவர்கள் அரைகுறையாகவே
அதைக் கற்று உலக மதிப்பைப் பெற்று உயர்ந்து வாழ்கின்றனர். தமிழரோ, அதை ஆங்கிலேயரைப் போலவே
பேசவும் எழுதவும் பாடுபட்டு முழுவதும் கற்க முயன்று தோல்வியுற்றுச் சீரழிகின்றனர்.
இந்த நிலையில் குப்பையில் முளைத்த வேப்பஞ் செடி மரமாகிச் செழித்துப் பரவிப் பெருநிலை அடைகிறது.
உயர்ந்த தென்னையில் இருந்து பெற்ற நெற்று, கன்றாக வளரும் போதே போதிய வளர்ச்சி பெறாமல்
கூழையாய்க் கெடுகிறது.
தாழ்ந்திருந்தவர் திறமையால் செல்வாக்குப் பெற்று உயரலாம். உயர்ந்திருந்தவர், வாழும் வல்லமை இல்லாத
காரணத்தினால் தாழலாம். இது உலக இயற்கை. மொழியிலும் இப்படி நேரலாம். பழம் பெருமை பேசுவதால்
பயன் இல்லை. கடமையைச் செய்யாமல் கெடுத்துக் கொள்கிறோமே என்று நெக்குருகி வருந்துவதால் பயன் உண்டு.
பழம் பெருமை மட்டும் இதுவரையில் எந்த நாட்டையும் மொழியையும் காக்கவில்லை. பழம்பெருமை உடைய
நாடுகள் பலவும் மொழிகள் பலவும் அழிந்திருத்தலை வரலாறு கூறுகின்றது.
கேட்டை இருவகையால் வருவித்துக் கொள்ள முடியும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.
ஒன்று: செய்யத் தகாதவற்றைச் செய்து கேடு அடையலாம்.
மற்றொன்று: செய்யத் தக்கவற்றைச் செய்யாமலிருந்து கேடு அடையலாம்.
ஒற்றுமைப் பட்டு வாழவேண்டிய (மொழிவகையால் சிறுபான்மையோராகிய) தமிழர் காலமெல்லாம் பிரிந்தும்
பிளந்தும் ஒருவரை ஒருவர் பழித்தும் வெறுத்தும் ஒற்றுமை குலைந்து மதிப்பு இழந்து கெடுகின்றனர். செய்யத்
தகாதவற்றைச் செய்து அடையும் கேடு இது.
இந்தியின் கிளைகள் தமிழகத்தை மூடி மறைப்பதற்கு முன்னே, தொன்மைத் தமிழாகிய தென்னை மரத்தைச்
செழித்து வளரச் செய்யவேண்டும். தென்னை மரம் இந்தியின் கிளைகளை ஊடுறுவிக் கடந்து மேலெழுந்து
வளர்ந்துவிட்டால், நேரே கதிரவன் ஒளியையும் காற்றையும் தடையின்றிப் பெற்று வாழ முடியும். இந்தி
புகுவதற்கு முன்னமே, ஆங்கிலம் இருந்த இடத்தில் தமிழ் விளங்குமாறு செய்துவிட வேண்டும். ஆனால் இன்னும்
அதைப் பற்றித் தமிழர் தம் கடமையைச் செய்ய்வில்லை. தபால் முதலிய்வற்றில் தமிழுக்கு இடமில்லாத நிலை
ஏற்பட்டபிறகும், தமிழர்க்குக் கடமையுணர்ச்சி ஏற்படவில்லை. தமிழைப் போதனை மொழியாகவும் ஆட்சி
மொழியாகவும் ஆக வழியின்றிக் கேடுஉறுகின்றது. செய்யத் தக்கனவற்றைச் செய்யாமல் அடையும் கேடு இது.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
(திருக்குறள் 466)
இந்நிலையில் ஒற்றுமையும் லிமையும் கடமையுணர்ச்சியும் இழந்து வாழும் மக்கள் மீது எதையும் திணிப்பது
யார்க்கும் எளிது. மத்திய அரசாங்க மொழியாக மட்டுமே இருப்பதற்கு உரிய இந்தி மொழி அவ்வாறு
நிற்காமல், ஆட்சி மொழியாகவும் போதனை மொழியாகவும் திணிக்கப் படுமானால் இந்தப் பழி யாரைச்
சாரும்? தமிழரையும் சாரும். செய்யத் தகாதன செய்தும், செய்யத் தக்கன செய்யாமலும் இருவகையாலும் கெட்ட
தமிழரையும் பழி சாரும். இந்தி யாரால் புகுந்தது என்றால், இப்படிப் பட்ட தமிழரால் புகுந்தது என்று கூற
நேரிடும்.
ஒரு நாற்பது ஆண்டுகள் கழித்து இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கும் போது, பல்வேறு கருத்துக்கள் கிளர்கின்றன.
1. மு.வ.வின் உருவகம் பெரும்பாலும் சரியென்றாலும் சிலவற்றில் மாறியிருப்பதை உணர முடிகிறது. வேப்ப
மரத்தின் கிளைகளை தெற்கு வீட்டார் வெட்டி விட்டாலும். அதன் நிழல் தெற்கு வீட்டிற்குள் காலையோ,
மாலையோ விழுந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக கேளிக்கை நேரங்களில், தெற்கு வீட்டுச்
சிறுவர்கள் வேப்பமர நிழலைத்தான் நாடி ஓடுகிறார்கள். கேளிக்கையாலே வேப்பமர நிழல் பெரிதாகத்
தெரிகிறது.
2. ஒற்றுமைக் குலைவு தமிழர்களிடம் இன்னும் கூடத்தான் ஆகியிருக்கிறதே ஒழியக்குறையவில்லை. குமுகாயம்
இன்னும் உடைந்து போயிருக்கிறது. சாதிச் சண்டை கூடிப் போய்விட்டது. என்றைக்கும் இல்லாதபடி சமயச் சண்டை
புதிதாகக் கிளப்பப் படுகிறது. அரசியலில் தமிழைக் காப்பாற்றப் புறப்பட்டகூட்டம் சோரம் போய்
இரண்டாகப் பலவாகச் சிதறி தென்மாவட்டங்களில் மறவர்களுக்குள்ளே குடும்பப் பகை காரணமாய் ஒன்றுமில்லாத
பொருளுக்கு நடக்கும் உட்சண்டை போல பெருத்துப் போய் கிடக்கிறது. இது உருப்பட வழியே இல்லை.
அரசியலில் வேறு கூட்டம் எழுந்தால் தான் உண்டு.
3. 60 களில் இருந்த தமிழுணர்வு 65-ல் உயர்ந்து 67-ல் வெற்றிவாகை சூடி, 72-ல் இரண்டாகப்பிளந்து
தன்னலமே பெரிதாகி, ஆடிக்காற்றில் அம்மியே பறந்ததுபோல், கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டு,
சூறையாடுவதே தொழிலாகிப் போய், ஆங்கிலத்திற்கும், மற்ற எல்லாப் பிற்போக்குத்தனத்திற்கும் வால்
பிடிக்கிற கூட்டமாகிவிட்டது. இற்றுப் போன பந்தலுக்கு இவர்களே முட்டுக் கொடுத்து புதிய மூங்கில்களை
நட்டுப் புதிய கீற்றுக்களைப் போட்டு முடைந்து பந்தலை புதுப்பிக்கிறார்கள். பந்தலின் பெருமை பேசியவர்கள்
இன்று இவர்களின் ஆலோசகர்கள். தென்னை மர நிழலில் விளையாடிய இளஞ் சிறார்கள் கூட பந்தல் நிழலுக்கு
வந்து விட்டார்கள். தென்னை இன்னும் கூழையாகவே இருக்கிறது. கூழைத் தென்னையை வெட்டிவிடலாம் என்று
சொல்கிற தமிங்கிலர் கூட்டம் பெருகிவிட்டது.
4. மு.வ.வின் காலத்தில் கல்லூரி, பல்கலைக் கழகப் படிப்பு தமிழில் இல்லையே என்று கவலுற்றார். இன்று
முதலுக்கே மோசம் என்ற முறையில் மேனிலை, உயர்நிலை, தொடக்க நிலை, இளஞ் சிறார்கள் என்று எல்லா
நிலையிலும் சறுக்கல். இன்றைக்கு நிலா நிலா ஓடிவா என்றாலே வேண்டாம்; மின்னுகிற விண்மீனைக் கூட்டிவா
என்று சொல்லுகிற நிலைக்குக் கேடு வந்து கிடக்கிறது. மு.வ. இன்றைக்குத் திகைத்துப் போய் விடுவார்.
ஆனால் அவர் வாரிசுகளான தமிழாசிரியர்கள் "அந்த மேடை, இந்த மேடை" என்று காசு பண்ணுவதிலேயே
குறியாய் இருக்கிறார்கள். "பட்டிமன்றம் பெரிதா? தமிழ் உணர்வு பெரிதா?" என்று பொங்கலை ஒட்டி மதுரை
அரசடியில் பட்டி மன்றமாம்! மக்களே! கூடிவாரீர்! தாலமன் வாப்பையா நடுவர்.
5.உலகத் தமிழனின் தொகை 7 கோடியை எட்டினாலும், அவர்களில் பலர் தமிங்கிலர் என்று முக்காடு
போட்டவுடன், உண்மைத் தமிழர் தொகை என்னவென்று கணக்குத் தெரியாது இருக்கிறோம்.
6. வான நிழல் அற்றிப் பேசிய கூட்டம் பரிசத் என்றும், தளம் என்று அணி சேர்த்து மறுபடியும் துளிர்
விட்டு, இன்று நடுவண் அரசின் மூலம் முயற்சி தொடர்கிறது.
7. படிப்பின் அவலம் சொல்லவொணா வகையில் இன்னும் தொடர்கிறது; நெட்டுருப் போடுவது இன்னும் தான்.
அறிவாவது, மண்ணாங்கட்டியாவது? மதிப்பெண் ஒன்றே தெய்வம். 90-ல் இருந்து 95-க்குள் நுழைவுத் தேர்வு
மதிப்பெண்களில் ஒரு இலக்கம் மாணவர்கள் வந்து சேருகிறார்கள். இது வளர்ச்சியா, வீக்கமா?
8.ஆங்கிலத்தில் என் மகன் பேசி விட்டான் என்று புளகாங்கிதம் அடையும் தாய் மேட்டுக் குடியிலும்
இருக்கிறாள்; மீன் குப்பத்திலும் இருக்கிறாள். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது ஆங்கில
மோகத்திற்குப் பொருந்துமோ?
9.செய்யத் தகாதவற்றை செய்தும் கேடு அடையலாம். செய்யத் தக்கவற்றைச் செய்யாமலும் கேடு அடையலாம். -
திருவள்ளுவரும், மு.வ.வும் கூறியவை இன்றைக்கும் பொருந்தும்
10. முன் தோன்றிய மூத்த குரங்கு என்று மட்டுமே இன்னும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா? அப்புறம்
தொங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். இனம் அழிந்து போகும். லெமூர் என்ற குரக்கினம் மடகாசுகர்
தீவில் மட்டுமே இன்று கிடக்கிறது.