முதற்பாடல் தொடங்கி நான்காம் பாடல் வரையிலும் தொடர்ந்த நாடகம் ஐந்தாம் பாடலிலும் தொடர்கிறது.
பாவை நோன்புக்கென அணிவகுத்து நிற்கும் கன்னியர் இன்னும் தம்மோடு வந்து சேராத தலைவியைப் பார்த்துப்
பேசுவது போல அமைந்தது ஐந்தாம் பாடல்.
பொக்கம் என்றால் வெற்றுப் பேச்சு. நம்மை நாம் ஓரொருவர் பார்ப்பது போலவே இறைவனையும் பார்க்க முடியும்
என்று உள்ளிருக்கும் தலைவி முன்னர் சொல்லிப் போனதைச் சொல்லிக் காட்டி இந்தப் பாடல் ஆரம்பமாகிறது.
மலை என்ற சொல் அண்ணாமலையாரைக் குறிக்கும். மலையாக நின்றபோதும் மாலும் பிரம்மனும் இறைவனை
அறிந்திலர் என்பது கூற்று. திருமாலும் பிரம்மனும் அறிய முடியாதவன் சிவன் என்கிறபோதும் அவன் மேல் பக்தி
வைத்த நாம் அவனை எளிதில் பார்த்து அனுபவிக்க முடியும் என்று கூறிச் சென்றவள் தலைவி. நீ சொன்ன
வார்த்தை வெறும் வார்த்தைதானோ என்கிறார்கள் கன்னியர். பாலும் தேனும் கலந்தது போல இனிக்க இனிக்கச்
சொல்லிப் போனவள் தலைவி. இப்போதோ பாவை நோன்பிருக்க வந்து சேராமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது
சரியோ என்பது கேள்வி.
எங்களைப் பார் என்கிறார்கள். இவ்வுலகத்தினர் அறிய முடியாதவன். தேவர்களும் அறிந்து சொலப்படாதவன்.
அவன் கோலம் எங்களை ஆட்கொள்ள வேண்டும் என்று பிரார்த்தித்துப் பாடுகிறோம். நம் போன்றவரை வலிய
ஆட்கொள்ளும் அவனுடைய எளிய சீலத்தை நாங்கள் பாடுகிறோம். அப்படி சிவனே சிவனே என்று ஓலமிட்டுப்
பாடுவதும் உன் காதுகளில் விழாமல் நீயிருப்பது எப்படி என்கிறார்கள். இனியாகிலும் வந்து கதவைத் திற
என்கிறார்கள்.
இப்பாடலின் முரண் நயம் விளக்கப்பட வேண்டியது. மலையாகக் கண்ணுக்குத் தப்பாது நின்றும் காண முடியலில்லை
எனும் போது காணப்பட வேண்டியதன் குறையன்று அது. காண்கிறவரின் குறை என்க. மாலுக்கும் பிரமனுக்கும் என்ன
குறை என்பதை விடுத்து இக்கன்னியர்தம் நிறை என்ன என்று பார்க்கலாமே. எம்மை ஆட்கொள்ள வேண்டும் என்ற
ஏக்கம் நிரம்பிய மனமே இறைவனை ஆட்கொள்ள வைக்கும் உபாயம் என்பது கருத்து. சரணடைந்தவர்க்கு
எளியவனாகிறான் இறைவன் என்க.
மால் எங்கும் உள்ளவன். விஷ்ணு என்றாலே விரவியிருப்பவன் என்பது பொருள். எங்குமிருப்பவனே அறிந்து கொள்ள
முடியாதவன் இறைவன். நான்முகனாகிய பிரமன் வேதா என்று அழைக்கப்படுகிறவன். அந்த வேதியனும் அறிய
முடியாதவன் இறைவன்.
மலையின் அருமை அளக்க முடியாதது. மலையின் பெருமை துளக்கலாகாதது. அப்படிப்பட்டவன் இறைவன் என்பதாலேயே
அவன் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான கோலம் கொண்டவன் என்பதாகிறது. அத்தகைய அரிய பரம்
பொருள் இக்கன்னியரை ஆட்கொள்ள இறங்கி வந்த சீலம்தான் என்னே என்று கூறுகிறார்கள். இப்படியாகக்
கடந்துறையும் கடவுள் இறைஞ்சி வரும் எளிமை கொண்ட இறைவனாகவும் இருக்கும் மேம்போக்கில் முரண்போலத்
தெரியும் இறை இயல்பை இப்பாடல் சிறப்பித்துப் பேசுகிறது.
நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நான் நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்.
என்பார் மணிவாசகர். பத்திமை நடிப்பே போதுமாம் இறைவனின் கருணைக்குப் பாத்திரமாக அவனைச்
சேர்வதற்கு.
இடையறா அன்போடு ஊடகத்தே நின்று உருகிடில் பின் என்னாகும்?
பன்னாளும் அவனை அழைத்து வரல் பழக்கமாகிப் போகும்போது இவன் நம்மைப் பன்னாள் அழைப்பு ஒழியான் என்று
எதிர்ப்படுமே என்கிறார் நாவுக்கரசர். மேலும் இதைச் சாதிக்க நாம் இதையும் அதையும் செய்ய
வேண்டியதில்லை. நமக்குள்ளே இருக்கும் உணர்வொன்றே இச்சாதனைக்குக் காரணமாக அமைகிறது என்க.
இப்படியாக ஐந்தாம் திருவெம்பாவைப் பாடல் இறைவனின் மிகு மேன்மையன்றியும் அடியார்க்கு எளியனாக வந்து
ஆட்கொள்வதை சிறப்பித்துக் கூறும் பாடலாக அமைகிறது.
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com