From mmanivannan@... Sat Jan 05 01:47:14 2002
Return-Path: X-Sender: mmanivannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 09:47:13 -0000
Received: (qmail 49515 invoked from network); 5 Jan 2002 09:47:13 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 09:47:13 -0000
Received: from unknown (HELO pintail.mail.pas.earthlink.net) (207.217.120.122) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 09:47:13 -0000
Received: from cpe-24-221-181-57.ca.sprintbbd.net ([24.221.181.57] helo=MMVHOME.earthlink.net) by pintail.mail.pas.earthlink.net with smtp (Exim 3.33 #1) id 16MnPx-0001MA-00; Sat, 05 Jan 2002 01:47:11 -0800
Message-ID: <004501c195ce$3fd96d20$0200a8c0@...>
To: , References: Subject: Re: [agathiyar] tamizaNNal on Kannaki festival
Date: Sat, 5 Jan 2002 01:49:15 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Mani M. Manivannan" Reply-To: "Mani M. Manivannan" X-Yahoo-Group-Post: member; u=51199710
X-Yahoo-Profile: mani m manivannan
X-Yahoo-Message-Num: 14538
தினமணி - சனவரி 5, 2002
ஒரு பண்பாட்டின் சின்னம்
தமிழண்ணல்
கண்ணகி சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டிருக்க வேண்டாம்; எடுத்துச் செல்லப்பட்டிருக்கக் கூடாது என்பதே பெரும்பான்மையான தமிழர்களின் உட்கருத்து. மக்களின் கருத்தை மதிப்பதே ஆட்சிக்கு அழகு.
கண்ணகி வரலாற்றில் மூவேந்தரும், மூன்று தலைநகரமும், மூன்று நாடும் தொடர்புபட்டிருப்பதைக் கண்டார் இளங்கோவடிகள். தமிழகத்தை ஒரே நாடாகவும், தமிழினத்தை ஒரே இனமாகவும் காண விழைந்தார். அவர் காலத்தில் வைதிக, புத்த, சமண சமய பேதங்கள் இருந்தன. ஆனால் சமய சமரசக் காப்பியம் படைத்தார் அவர்.
கண்ணகி எனும் பெண்பாத்திரம், பெண்ணியம் பேசும் இன்றையப் பேரறிஞர்களுக்கும்ஒரு காட்டாக உளது. அவள் ஒரு குடும்பப் பெண்; வண்ணச் சீறடி மண்மகள் அறியாதபடி அடக்கமாய் வாழ்ந்தவள். "வாழ்க்கைத்துணை' என்ற தொடரை மெய்ப்பித்தவள். பெண்மை நலங் கனிந்த பெட்டகம். இவற்றைப் பார்த்து, "பெண்ணடிமை பார்த்தீரா' என்று சிலர் விரைவுபடுவர்; வேதனை பேசுவர். ஆனால், பெண் அடக்கம் பேணுவாளே தவிர அடிமையாகமாட்டாள்; பொறுமை பேணும் அவள் பொங்கி எழுந்தால் பூமி தாங்காது; அடிமைப்படுத்தவோ, அவமானப்படுத்தவோ முனைவோரை அழித்து ஒழிக்கவும் தயங்க மாட்டாள்.
திருவள்ளுவர்கூட எண்ணினார் பெண்ணினம் நல்லதாக இருந்தால், உலகம் வாழும் என்று.ஒளவையார் கூட, மகளிர் என்றும் சலனமற்ற திண்மை மிக்கவரே; "எவ்வழி ஆடவர் நல்லவரோ, அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்று ஆடவர்க்குப் பொறுப்பைத் தந்தார். அதாவது பெண்கள் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது.
சிலம்பில் அக்கால நிலப்பரப்பை, நிலபுலன்களை, குடிமக்களை, அவர்களின் வாழ்வுமுறைகளை நிரம்பக் காணலாம். இதனால் இது குடிமக்கள் காப்பியம், தமிழர் தேசியக் காப்பியம் எனப்பட்டது.
இன்றும் நாட்டியக் கலை தமிழ்நாட்டில் தோன்றிய தமிழர்களுக்கே உரிய கலை என்பதைக் கூற, முழுமையாய்த் துணைசெய்வது இக் காப்பியமே. தமிழர்தம் இசையும் கூத்தும் நாடகமும் விரவிக் கிடப்பது இப் பெருங்காப்பியம்.
இவை அனைத்தையும் கூற, கண்ணகி வரலாறு துணையாகும் என்பதாலேயே, இளங்கோவடிகள் இச்செய்திகளைக் கேட்டதும், "நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்' என்றார். இவ்வகையில் எண்ணிப்பார்த்தால், கண்ணகி தமிழர் பண்பாட்டின் அடையாளம்; தமிழ் மகளிரின் நாகரிகச் சின்னம்; ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் உளக் கோயிலில் வீற்றிருக்கும் தெய்வச் சிலை.
இளங்கோவடிகள் காப்பியத்தை முடிக்கும்போது, "தெய்வம் தெளிமின், தெளிந்தோரப் பேணுமின்' என உலக மக்களுக்கு எடுத்தோதினார். கண்ணகி மதுரையை எரித்தது என்பது, "அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து, அரசு முறை பிழைத்த' தீமையை எரித்ததாகும். வெறுமனே மதுரை எரியுண்டது என்று மட்டும் கருத வேண்டாம்.
கணவன் குற்றமற்றவன் என்று, கண்ணகி கண்முன்னர் மெய்ப்பித்தாள். மக்கள் யாரும் மறுக்கவொண்ணாத நிலை; ஊரே கொதித்து எழுந்தது. ஊரார் கொதிப்பும் பெண்ணரசியின் மனக் கொதிப்புமே மதுரையை அன்று - முறை தவறிய தீமையைச் சுட்டெரித்தன.
மதுரை எரியுண்ட நாள் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை மதிமறை (அமாவாசை) நாள்.அவள் அன்றே மதுரையைவிட்டு வெளியேறி, வையைத் தென்கரை வழியாக, கல்லும்முள்ளும் காலிற் குத்த மேடும் பள்ளமும் பாராமல் பதினான்கு நாள் நடந்தாள். சேரநாட்டு எல்லையை அடைந்தாள். பிறந்து வளர்ந்த சோழநாட்டில் வாழவில்லை; வாணிகம் செய்யத் திருந்திய கணவனுடன் புகுந்த பாண்டிய நாடோ வாழவிடவில்லை; எனவே சேரநாட்டின் எல்லையுட் புகுந்து, "நெடுவேள் குன்றம் அடிவைத்து' ஏறி, உச்சிசென்று, கணவனுடன் சென்றடைந்தாள்.
அவளைப் பார்த்த வேட்டுவப் பெண்ணும் கவுந்தியடிகளும் குன்றக் குறவர்களும் "இவள் ஒரு தெய்வம்' என்றே போற்றினர். மனிதர்களில் மனிதர்களும் உண்டு; விலங்குகளும் உண்டு; தெய்வங்களும் உண்டு என்ற கருத்தில் இதைப் பார்க்கவேண்டும்.
தமிழ் மக்கள் ஆடிமாதம் வெள்ளிக்கிழமை சார்ந்த "அமாவாசை', மதிமறைநாள் தொடங்கிப் பதினான்கு நாட்கள் நோன்பிருக்க வேண்டும். நமது இசுலாமிய நண்பர்களின் "ஈகைப்பெருநாள்' நோன்பு போலவும் முருகக் கடவுளுக்குரிய "கந்தர்சஷ்டி விழா'ப் போலவும் முழுநாளும் உண்ணா நோன்பிருந்து கொண்டாட வேண்டும். புரட்டாசி மாதம் நகரத்தார்கள் இராமாயணம்படித்து, இறுதி நாளன்று "பட்டாபிசேகம்' என்று உறவினர்களை அழைத்து, விழாப் போல விருந்து வைத்துக் கொண்டாடுவர்! அது போலப் பதினான்கு நாளும் சிலப்பதிகாரம் படித்தல் - முற்றோதுதல் வேண்டும். சிலப்பதிகாரக் காப்பியம் பற்றிய சொற்பொழிவுகள், இசை கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். மகளிர் திருவிளக்கேற்றியும் மலர் தூவியும் கண்ணகி வழிபாடு நடத்த வேண்டும்.
குடிசை முதல் அரண்மனை அனைய வீடுகள் வரை மகளிர் முன்னின்று - கண்ணகியின் சிறு சிலையோ, படமோ, சிலப்பதிகாரக் காப்பியமோ, வைத்து - இந் நோன்பைக் "கண்ணகி நோன்பாக' - "மங்கல மடந்தைவிழா'வாகக் கொண்டாட வேண்டும். கண்ணகி தெய்வமான இறுதி நாளன்று விழாவாக நிறைவேற்ற வேண்டும்.
சேரநாட்டு எல்லையில் - கேரளம் இசைந்தால் கண்ணகி கோயிலை ஏற்று, தமிழ்மக்கள் அங்கு ஆடிப் பெளர்ணமி - முழுமதி நாளன்று சென்று வழிபட வேண்டும். கேரள அரசு இசையாவிடின், தமிழக எல்லையில் கோயில் எழுப்பவேண்டும். இன்று ஐயப்பனை வழிபடச் செல்வதுபோலக் கண்ணகியையும் வழிபட வேண்டும். இது மூடநம்பிக்கை என்று யாரும் முணுமுணுக்க வேண்டாம். இதனைத் தமிழ் - இயல் இசை நாடக - விழாவாக, தமிழக மகளிர் அறிவொளி இயக்க விழாவாக, தமிழர் பண்பாடு நாகரிக மீட்டுருவாக்க விழாவாக, தமிழ் மொழியை அரியணை ஏற்றும் விழாவாக உலகத் தமிழர்கள் அனைவரும் கொண்டாடவேண்டும். பகுத்தறிவுக்கு ஒத்த, நன்னம்பிக்கை விழா ஒன்று, இன்று தமிழர்களுக்குத் தேவைப்படும் சமயம் இது. மனிதனது உளவியல் தன்னம்பிக்கையோடு கூடிய இறைநம்பிக்கையுமாக இருப்பதால் இதை "அலட்சியமாய்க்' கேலிக்குரியதாகப் பேசாமல், காலத்தினால் செய்யும் "ஒரு தமிழர் புரட்சியியக்கமாக' உடனே தொடங்குவோமாக! அதற்கான தொடக்கத்திற்கு, இப்போதே அறிஞர்கள் கூடித்திட்டமிட்டு, மக்களுக்கு அறிவிப்பது பயனுடையதாகும்.
----- Original Message -----
From: "perichandra" To: Sent: Friday, January 04, 2002 6:59 PM
Subject: [agathiyar] tamizaNNal on Kannaki festival
> அன்பர்களே
> வணக்கம்.
> தமிழண்ணல் தினமணியில் பண்பாட்டின் சின்னம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை காண்க:
>
> http://www.dinmani.com/NewsItems.asp?ID=DNE20020104101113&Title=Editor
> ial+Page&lTitle=R%FBXVeLm&rLink=0
>
> தமிழர்களுக்கு நடக்கப்போகும் நன்மையை நினைத்தாலே புல்லரிக்கிறது...
>
> "என்றுமுள தென்றமிழ்"
> பெ.சந்திரசேகரன்.