From eramurug@... Sat Jan 12 08:02:54 2002
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 12 Jan 2002 16:02:54 -0000
Received: (qmail 60624 invoked from network); 12 Jan 2002 16:02:54 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 12 Jan 2002 16:02:54 -0000
Received: from unknown (HELO web14807.mail.yahoo.com) (216.136.224.223) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 12 Jan 2002 16:02:54 -0000
Message-ID: <20020112160254.8392.qmail@...>
Received: from [210.214.131.69] by web14807.mail.yahoo.com via HTTP; Sat, 12 Jan 2002 08:02:54 PST
Date: Sat, 12 Jan 2002 08:02:54 -0800 (PST)
Subject: ezuththukkArar - 1
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20020112154606.65335.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14703

அன்பர்களே,

வரும் வாரம் என் இரண்டு புதுச் சிறுகதைத் தொகுதிகள் வெளியாகின்றன
('மந்திரவாதியும், தபால் அட்டைகளும்', "ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர்").
'தேர்', 'ஆதம்பூர்க்காரர்கள்' என்ற என் நூல்களின் மறுபதிப்பு புது
நாவலோடு, தமிழ்ப் புத்தாண்டு சமயத்தில் வர ஏற்பாடு நடக்கிறது.

நிற்க - 'மந்திரவாதியும், தபால் அட்டைகளும்' தொகுப்பில் இடம்பெற்ற ஒரு
சிறுகதையை இங்கே பொங்கல் வாழ்த்துக்களுடன் பகிர்ந்து கொள்வதில்
மகிழ்கிறேன்.

அன்புடன்,
இரா.முருகன்
------------------------------------------------------
எழுத்துக்காரர்

(இரா.முருகன் -Oct 01)


பெறுநர் ரகு@சேவை.காம்

ரகு,

நான் நந்தினி. நந்தினி பரணன். இங்கே ஒரு பிரபலமான சாஃப்ட்வேர்
நிறுவனத்தில் வர்த்தகப் பொறுப்பாளராக இருக்கிறேன். அதாவது பிசினஸ்
மேனேஜர். பரணன் இன்னொரு பன்னாட்டு நிறுவனத்தில் உப தலைவராக - வைஸ்
பிரசிடெண்ட்- இருக்கிறார்.

உங்கள் மின்னஞ்சல் நேற்றுக் கிடைத்தது. பொதுவாக இப்படிப் பல மின்னஞ்சல்
முகவரிகளுக்கு ஒரே நேரத்தில் போய்ச் சேரும் விளம்பர அஞ்சல்களை வடிகட்ட
வீட்டுக் கம்ப்யூட்டரில் வசதியுள்ளதால் அவை எங்கள் கண்ணில் படாமலேயே
மடிந்து போகும். மேலும், மின்னஞ்சல் மூலம் கம்ப்யூட்டர் கிருமிகள் பரவ
வாய்ப்புள்ளதால் புதிதாக யாரிடமிருந்து கடிதம் வந்தாலும் அவசரப்பட்டுத்
திறக்க மாட்டோம்.. என்றாலும் உங்கள் கடிதத் தலைப்பில்
"ஆதிமுலமே..அவசரம்" என்று இருந்ததாலோ என்னவோ தப்பித்து விட்டது.

எந்த விதமான சேவை வேண்டுமானாலும் குறைந்த கட்டணத்தில் செய்து தருவதாக
உங்கள் அஞ்சலில் குறிப்பிட்டிருந்தீர்கள். ஏதாவது பெரிய சைஸ் சேவைநாழி
வைத்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை :-)

முன்வரியில் பக்கவாட்டில் புன்சிரிப்பு முகம் வரைந்திருப்பதைப் பார்த்து
நீங்களும் சிரித்தீர்கள் என்றால் இடியாப்பத்தைச் சேவை என்று வழங்குவது
உங்கள் குடும்ப வழக்கமாகவும் இருக்கலாம். அது இல்லாவிட்டாலும் ஒரு கணம்
மரியாதைக்காகப் புன்சிரித்திருந்தால் நன்றி.

விஷயத்துக்கு வருகிறேன். நானும் பரணனும் முன்னால் குறிப்பிட்டபடி
உத்தியோகத்துக்குப் போகும் கணவனும் மனைவியும் - வரிசை
பிசகியிருக்கிறது என்று நினைக்கிறேன் - போகிறது, விஷயம் தானே
முக்கியம்.. நாங்கள் இருவரும் வார நாட்களில் வீட்டில் இருப்பது இயலாத
காரியமாகி இருக்கிறது. திரும்பவும் இரவு வெகு நேரம் ஆகிறது.

எங்கள் ஒரே மகன் நஜன் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கிறான். பகல்
நேரங்களில் அவனும் பள்ளியில் தான். வகுப்பு முடிந்து அப்படியே டென்னிஸ்
பயிற்சிக்குப் போய்விட்டு அவன் திரும்ப இரவு ஏழு மணியாகி விடும்.

நீங்கள் மேலே படிக்கப் பொறுமை இல்லாமல், எங்களுக்கு சமையலுக்கு ஆள்
தேவைப்படுகிறது என்று தீர்மானம் செய்து கொண்டு இது தொடர்பாக மேலும்
தகவல்களை எதிர்பார்த்தால் வருந்துகிறேன். மைக்ரோ அவன் வீட்டில் உண்டு -
ஓவன் என்று பிழையான உச்சரிப்போடு எழுத மனம் வரவில்லை . அவன் என்று
எழுதும் போது எனக்குச் சிரிக்கவே தோன்றுகிறது. நிற்க. உறைந்த உணவு
வகைகளும் பழங்களும் வெண்ணெய், ரொட்டி இன்ன பிறவும் வீட்டில் எப்போதும்
தாராளமாக இருப்பதால் சமையல் எப்போதுமே எங்களுக்குப் பிரச்சனையே
இல்லை.

எங்கள் பிரச்சனை எல்லாம் இதுதான். இந்த மின்னஞ்சல் யுகத்திலும் கடிதங்கள்
எழுதுவதும் அனுப்புவதும் பெறுவதும் என்னமோ நிற்கவில்லை. பேனாவையும்
காகிதத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு கடிதம் எழுத உட்கார்ந்தால், கம்ப்யூட்டர்
முன்னால் உட்கார்ந்து தட்டச்சு செய்வதுபோல் கடகட வென்று ஓட மாட்டேன்
என்கிறது. எழுதுவதில் ஏதாவது தப்பு விழுந்துவிட்டால் அதன் மேல் புதிதாக
எழுத முடியாமல் கோடு போட்டு அடிக்கும்போது மனதில் குற்ற உணர்ச்சி
ஏற்படுகிறது. இந்தத் தொல்லையைத் தவிர்க்கக் கம்ப்யூட்டரில் கடிதம் எழுதி
அதை அச்சிட்டுக் கீழே கையெழுத்து மட்டும் போட்டு அனுப்பலாம் என்றால்
எங்கோ பிசகு தெரிகிறது. அதில் ஒரு அன்னியோன்யம் தட்டுப்படுவதில்லை.

எங்களுக்கு ஒரு எழுத்துக்காரர் வேண்டும். எழுத்தாளர் இல்லை. எழுத்துக்காரர்.
நான் கம்ப்யூட்டரில் எழுதியதைத் திரும்பக் கையெழுத்தில் எழுதித் தருகிறவர்.
இந்த வேலை குறித்த விவரங்கள் வருமாறு :

1) அறுபது வயதுக்கு மேற்பட்ட, தமிழும் ஆங்கிலமும் எழுதப் படிக்கத் தெரிந்த
ஆணோ பெண்ணோ எழுத்துக்காரராக வரலாம். மதம், இனம் போன்றவை குறித்து
எந்தப் பிரச்சனையும் இல்லை. மூக்குப் பொடி, வெற்றிலை, புகையிலை, பாக்கு
மெல்லுவது, சிகரெட் பிடித்தல் போன்ற எந்த விதமான கெட்ட பழக்கங்களும்
அவருக்கு இருக்கக் கூடாது. தினசரி குளிப்பவராக, தூய்மையான ஆடை
அணிந்தவராக, மூக்குக் கண்ணாடி மூலமோ, அது இல்லாமலோ சராசரியான
கண்பார்வை உள்ளவராக, கம்ப்யூட்டரை இயக்கிக் கோப்புக்களைப் படிக்கத்
தெரிந்தவராக, ஆணாக இருப்பின் முகத்தில் இரண்டு நாள் தாடியோடு இல்லாமல்
சிரத்தையாகச் சவரம் செய்து கொள்கிறவராக இருப்பது அவசியம். மற்றபடி,
உடல்குறை ஒரு பொருட்டல்ல. எனினும் எங்களது இருப்பிடம் நான்காவது மாடியில்
அமைந்த குடியிருப்பு என்பதையும், அவ்வப்போது லிப்ட் வேலை செய்யாது
என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.

2) இந்த வயதுக்காரர்கள் கம்ப்யூட்டரில் அறிமுக அறிவோடு யோடு கிடைப்பது
அரிது என்று எனக்குத் தெரியும். இதற்கான கம்ப்யூட்டர் அறிமுகக் கல்வியை
அவர் பெற்று வேலையை ஏற்றுக் கொள்ளலாம். பயிற்சிக் கட்டணத்தை நாங்கள்
செலுத்தி விடுகிறோம்.

3) காலையில் ஒன்பது மணிக்கு நாங்கள் அலுவலகம் கிளம்பும்போது வீட்டைப்
பூட்டி, வரவேற்பறை வரை நுழைவதற்கான சாவியை மட்டும் எங்கள் பலமாடிக்
குடியிருப்பு நிர்வாக அலுவலகத்தில் கொடுத்து விட்டுப் போய்விடுவோம்.
எழுத்துக்காரர் சரியாகப் பத்து மணிக்கு அந்தச் சாவியைப் பெற்றுக் கொண்டு
எங்கள் வரவேற்பறையில் பணியைத் தொடங்கலாம்.

4) நினைவு படுத்துகிறேன். அவருக்கு வரவேற்பறைக்குள் நுழைய மட்டும்தான்
அனுமதி. அங்கே குடிதண்ணீர் உண்டு. கட்டிடத்தின் பொதுக் கழிப்பறை
கீழ்த்தளத்தில் உள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

5) நாங்கள் எழுத வேண்டிய கடிதங்களைக் கம்ப்யூட்டரில் எழுதி
வைத்திருப்போம். அவற்றைத் திருத்தமாகக் கையெழுத்தில் வெண்தாளில் எழுத
வேண்டும். கையெழுத்து அழகாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தெளிவாக
இருக்க வேண்டும்.

6) சில கடிதங்களை டேப் ரிக்கார்டரிலும் பதிவு செய்திருப்போம்.
அவற்றைக் கேட்டு அப்படியே படியெடுக்க வேண்டும். இந்த வேலை பழகியதும்,
சொல்ல வேண்டியவற்றைச் சுருக்கமாகச் சொல்லியோ, கம்ப்யூட்டரில் பதிந்தோ
வைத்து விடுவோம். அவற்றை விரிவாக்கி, முந்தைய கடிதங்களோடு (இவை
அனுப்பப் பட்டவையாகவோ, பெறப்பட்டவையாகவோ இருக்கலாம்) தொடர்பு
படுத்தி முழுக் கடிதமாக எழுத வேண்டும்.

7) வேலை நுணுக்கங்கள் கைவரப் பெற்றதும், வந்த கடிதங்களைப் படித்து
அவற்றுக்குத் தகுந்த பதில் எழுதி நாங்கள் அதைச் சரிபார்க்க எடுத்து வைப்பதும்
வேண்டியிருக்கும்.

8) கடிதங்களை எங்களில் யாராவது கையொப்பம் இட்ட பிறகே அனுப்ப
வேண்டும். மாதா மாதம் தேவைப் படும் பேனா மசி, கடித உறைகள், தபால்
தலை, கடித உறையை ஒட்டப் பசை - எச்சில் தடவி ஒட்டுவதை நாங்கள்
விரும்புவதில்லை - எழுத வெண்மையான ஏ-4 அளவு தாள்கள், எழுதும்போது
கீழே வைக்க அட்டை, செருகிக் கொள்ள கிளிப், ஸ்டேப்லர் போன்றவை
வாங்க மாதத் தொடக்கத்தில் தனியாகத் தொகை வழங்கப் படும். அதற்கான
செலவுக்கணக்கையும் கையிருப்பையும் நாங்கள் கோரும்போது எழுத்துக்காரர்
சமர்ப்பிக்க வேண்டும்.

9) எழுதி, சரிபார்த்து, கையொப்பமிடப்பட்டு, அனுப்பத் தயாராக உள்ள
கடிதங்களை எழுத்துக்காரர் மாலையில் வேலை முடிந்து கிளம்பும்போது
தெருமுனையில் உள்ள அஞ்சல் பெட்டியில் போட்டு விட்டுப் போக வேண்டும்.
இதற்காக அவருக்குத் தனித் தொகை எதுவும் வழங்கப் படாது.

10) கடிதங்களில் எழுதப் படும் தகவல்கள், அவற்றைப் பெறுகிறவர்கள் பற்றிய
எதையும் எழுத்துக்காரர் யாரோடும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. வேலைக்கான
ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திடும்போது இது உறுதி செய்து
கொள்ளப்படும். மீறினால், பணியில் இருக்கும்போதோ, விலகிய பிறகோ
சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள வேண்டி வரலாம் - இப்படி எல்லாம் நடக்காது
என்றாலும் முன் கூட்டியே சொல்வதில் தவறில்லை அல்லவா?

11) கம்ப்யூட்டரையும் டேப் ரிக்கார்டரையும் எங்களுக்கான கடிதங்களை எழுதும்
பணிக்குத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது.

(தொடரும்)

__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/