வெண்டலையோர் கலனாப் பலி தேர்ந்து விரிசடைக்
கொண்டல் ஆரும் புனல்சேர்த்(து) உமையாளொடும் கூட்டமா
விண்டவர்தம் மதில்எய்த பின் வேனில் வேள் வெந்து எழக்
கண்டவர் மூக்கீசரத்து எம் அடிகள் செய் கன்மமே.
கபாலம் கையேந்தி இரந்து பலியேற்றும், விரிந்த
சடையில் கங்கையாற்றைத் தாங்கியும், மைதீட்டப்பெற்ற
அழகிய கண்களையுடைய உமையோடு கூடியும்,தம்மொடு
மாறுபட்ட அசுரர்களாகிய திரிபுராதிகளின் மதில்களை
அழித்துஅவர்களின் செருக்கை அடக்கியும், மன்மதன்
வெந்து நீறாகும்படி நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தும்,
நம் போன்ற அடியவர்களைக் காக்கும் பொருட்டு இவ்வாறு
செய்த பிரானின் இடம் உறையூர் என்னும் முக்கீச்சரமே
யாகும்.