நிலைபெற்ற, ஒளியுடைய சிவகலையை அடைந்தால் நாம் நினைக்கும்
(பர)காரியங்களை முடித்துக் கொள்ளலாம்.
106. எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன்
தொல்லையருள் பெற்றக் கால்.
சிவனுடைய பழமையான மூலவித்தின் கலையை அறிந்தடைந்தால்
எப்பொருளையுமடையலாம். "எல்லாப் பொருளும்" என்றதால் பரப்
பொருளன்றி இகப்பொருளையும் அடையலாம் என்பது ஒரு சாரார் கருத்து.
சிவ உருவத்திலிருந்து வெளிக்கிளம்பும் அருட்கலையைப் பெற்றக்கால்
சிந்தையாகிய மனத்திலிருக்கும் பந்தபாசங்கள் நீங்கிவிடும்.
பந்தபாசத்தைத் தற்கால வேதந்திகள் ஒழிக்க வேண்டுமென்ற எண்ணத்தையே
மேற்கொண்டு மற்றவர்களையும் நம்பவைக்கிறார்கள். அப்படிப் பேசுவோர்
அதை ஒழித்துவிட்டதை வெளித் தோற்றத்தில் காட்டவில்லை. ஒரு
வேட்டியைக் குளிருக்குப் போர்வையாகப் பாவித்தால்கூட, அதைப்
பாதுகாக்க எண்ணம் உண்டாகும். ஆகையால் அது அவர்களால் முடியாதென்பது
திண்ணம்.
பட்டினத்தார் :
"ஆற்றொடு தும்பை அணிந்தாடும் அம்பல வாணர்தம்மைப்
போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்
சோற்றாவி அற்றுச்சுகமற்றுச் சுற்றத் துணியும் அற்றே
ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற் றிருப்பர்களே."
இந்நிலையடைந்தோரே பந்தபாசத்தை ஒழித்தவராவார்.
108. மாசற்ற கொள்கை மதிபோலத்தான் றோன்றும்
ஈசனருள் பெற்றக்க் கால்.
சிவ அருளை ஒருவன் அடைந்தால் குற்றமற்ற அறிவானது சந்திர கலையின்
நிறமதாகவே தோன்றும். சிவகலையை அறியாவிடின் அறிவாகிய
பிரணவம் தோன்றாது. அறிவு தோன்றாவிடில் சிவகலையை
அறியமுடியாது. மனனம் ஒழியாவிட்டால் இரண்டையும் அறிய முடியாது.
இவ்விரண்டையும் அறியாவிடில் மனதையடக்க இயலாது. இதையே வாசிட்டம்
:
"இனைய மூன்றுஞ் சமமாக வியற்றா ரெம்மட்டம் மட்டு
மனைய பதமெய்தா வருடமாயிரங்கள் சென்றாலும்
வினையில் காலஞ் சமமாக மிகுநாளியற்றின் மிகப்பலிக்கு
நினைவி லொன்றொன்றா வியற்றில் நிலைகூடா நிட்பலமாகும்."
அகார சத்தத்தினாலே கூறப்படும் சிவகலையை அடையச் செய்யவேண்டிய
ஞான வினைகளைச் செய்து வாவெனக் கூறி, அருட்கலையாம் சிவகலையை
அடைந்தவர்களுக்கு அறிவின் ஒளி தாவியெழுந்து வரும். செயல்
இல்லையெனில் அருள் இல்லை என்பது முடிபு.